வைஃபை ஆன் செய்ததும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியோடு தொகுதிப் பங்கீடு செய்து கொண்ட போட்டோ, வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கிட்டத்தட்ட ஒரு மாத கால நடைமுறைக்கு பின் இன்று மார்ச் 9ஆம் தேதி திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளோடும் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று இருக்கிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 21 தொகுதிகளில் திமுகவும், தமிழகம் 9, புதுச்சேரி 1 என 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தலா 2 இடங்கள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக தலா ஒரு இடங்கள் என திமுகவின் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எத்தனை இடங்களில் போட்டியிட்டனவோ அதே இடங்களில் தான் இப்போதும் போட்டியிடுகின்றன. தேர்தல் நடவடிக்கைகளை திமுக தொடங்கும் போது கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் திமுகவின் தலைமை கழக நிர்வாகிகளிடம் , ’2019 இல் அமைந்த அதே அணி… அதே எண்ணிக்கை… அதே ஒற்றுமை… அதே வெற்றி என்ற அளவில் இந்த தேர்தலிலும் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படியே கூட்டணி கட்சிகள் அனைத்துக்கும் அவை 2019ல் எத்தனை இடங்களில் போட்டியிட்டனவோ, அதே இடங்கள் தான் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக இரண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வாய்ப்பை இப்போது இழந்துள்ளது அதாவது விட்டுக் கொடுத்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர்கள் 20 இடங்களில் போட்டியிட்டார்கள். அவர்களை தவிர கொமதேக, மதிமுக, ஐஜேகே ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். மேலும் விசிக போட்டியிட்ட இரு தொகுதிகளில் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். மொத்தம் 24 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றனர்.
அதில் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் கடந்த முறை பெரம்பலூரில் போட்டியிட்ட ஐஜேகே இப்போது திமுக கூட்டணியில் இல்லை. அதையும் சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் நிற்கிறார்கள். ஆனால் உதயசூரியன் சின்னம் என்று பார்க்கும்போது விசிக ஒன்று, மதிமுக ஒன்று என இரு தொகுதிகளில் இந்த தேர்தலில் உதயசூரியனுக்கு பதில் அவரவர் சின்னங்களில் போட்டியிடப் போகிறார்கள். கூட்டணிக் கட்சிகளில் கொமதேக மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. ஆக 22 தொகுதிகளில் தான் உதயசூரியன் களம் காண்கிறது. இது 2019 இல் போட்டியிட்ட தொகுதிகளைவிட இரு தொகுதிகள் குறைவாகும்.
கமல்ஹாசனுக்கு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படாமல் மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை கமலுக்கும் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டால் உதயசூரியன் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கும்.
அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் 2019 இல் போட்டியிட்ட அதே எண்ணிக்கையில் தான் இப்போதும் போட்டியிடுகின்றன. பின் எதற்கு இத்தனை நாட்கள் இழுத்தடிப்பு, பேச்சுவார்த்தை, மனஸ்தாபம், விசிக உயர் நிலைக் குழு கூட்டம், மதிமுக அவசர நிர்வாகக் குழு கூட்டம் என்றெல்லாம் திமுகவுக்குள்ளேயே பேச்சுகள் எழுந்திருக்கின்றன.
அறிவாலய புள்ளிகளிடம் இந்த கேள்வியைக் கேட்டபோது, ‘தொகுதிப் பங்கீட்டை பொறுத்தவரை 2019 இல் போட்டியிட்ட அதே எண்ணிக்கை என்பதில் ஸ்டாலின் தொடக்கத்தில் இருந்தே உறுதியாக இருந்தார். கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகளை கோரியதால்தான் இவ்வளவு நாட்கள் இழுத்திருக்கிறது. உண்மையிலேயே இதில் திமுகதான் இரு இடங்களில் உதயசூரியன் சின்னம் களம் காணும் வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளது’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஞ்சுமெல் பாய்ஸ் விமர்சனம் : ஜெயமோகனுக்கு கேள்வி எழுப்பிய வன்னியரசு