வரும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை ஒட்டி, ராஜ்பவனில் ஆளுநர் ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தநிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார்.
அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பாஜகவின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
ஆளுநர், சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது.
உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
மத்திய ஆட்சியின் முகவர்களாக, மாநில சுயாட்சிக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்கள் என்ற ஏற்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் பெற்றதில் இருந்தே அரசியலைமைப்புக்கு விரோதமாக செயல்படுகிறார். கூட்டாட்சிக்கு விரோதமாக இருந்துவருகிறார். அப்பட்டமாக அரசியல் செய்துவரும் ஆர்.என்.ரவி அந்த பதவியில் நீடிப்பதே இழுக்கு என சி.பி.ஐ(எம்) பலமுறை கூறியுள்ளது.
தொடர்ந்து அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிவருகிறது. எனவே அவருடைய தேனீர் விருந்தில் பங்கேற்பதென்ற கேள்வியே எழவில்லை.
கடந்த ஆண்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிதிருந்தது. அதேவேளையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தேநீர் விருந்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆஸ்கார் 2024: 13 பிரிவுகளில் தேர்வான நோலனின் ஓப்பன்ஹைமர்
மேற்கு வங்கத்தில் திருணமூல் தனித்து போட்டி: மம்தா அறிவிப்பு!