ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

அரசியல்

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் அழைப்பு விடுத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா, நீட் மசோதா , சட்டப் பல்கலைக் கழக மசோதா என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

திராவிடம், திருக்குறள், தமிழ்நாடு ஆகியவை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்தசூழலில் நாளை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

நேற்று விசிக தலைவர் திருமாவளவன், “ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக எம்.பி.க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டார்.

விசிகவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளன.

சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “நாங்கள் குடியரசு தினத்தைப் புறக்கணிக்கவில்லை. ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அடிமட்ட தொண்டர் போல் செயல்படுகிறார். அவர் அழைக்கும் தேநீர் விருந்துக்கு நாங்கள் செல்லவில்லை. அதனைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, “காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் வரை ஆளுநர் அழைக்கும் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம். ஆளுநர் தனது அதிகார வரம்புகளை மீறி ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைப் புகுத்த முயற்சித்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பல நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தது போல இந்த நிகழ்ச்சியையும் புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. அப்போது ஆளுநருக்கு டீ காசு மிச்சம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்குக் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

தொடர்ந்து ஆளுநரின் பொங்கல் விழாவையும் திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தனியரசு ஆதரவு!

பெண்கள்னா தீட்டா? சாமி சொல்லுச்சா?: ஐஸ்வர்யா ராஜேஷ்

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *