ஆளுநர் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் புறக்கணிப்பு!
ஆகஸ்ட் 15-ஆம் தேதி 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தேநீர் விருந்தளிப்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தநிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்…
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவரது பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் எழுந்த சர்ச்சைகளை போல இதற்கு முன்பு எந்த ஆளுநர் மீதும் எழுந்ததில்லை. அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் உதவியுடனும், அறிவுரையின்படியும் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும்.
ஆனால், தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்துகிற போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறார். பாஜகவின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது.
அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும். இந்நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
கூட்டாட்சியை அல்லது அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடிப்பதே இழுக்கு எனும் நிலையில், அவரோடு தேநீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. சி.பி.ஐ(எம்) அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.ரவி, கடந்த 2019 ஜூலை மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். இவரது அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அறிவுத் துறையில் திறன் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளை சிதைக்கும் முறையில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தடை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தை புறக்கணித்து, அவரது ஜனநாயக விரோக செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
விசிக தலைவர் திருமாவளவன்
சுதந்திர தினத்தையொட்டி மேதகு ஆளுநர் வழக்கம்போல அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்கு எமது நன்றி. எனினும், ஆளுநர் அவர்களின் தொடர் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளின் காரணமாக இந்த நிகழ்வை விசிக புறக்கணிக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினம் மற்றும் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளித்த தேநீர் விருந்தையும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மனுபாக்கருக்கும் நீரஜ் சோப்ராவுக்கும் கல்யாணமா? – தந்தை சொல்வது என்ன?
“ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்” – தங்கம் தென்னரசு பேட்டி!