தமிழ்நாடு சட்டமன்றத்தில் சபாநாயகராக இருக்கும் அப்பாவு அடிப்படையில் ஓர் ஆசிரியர் என்பதால் சட்டமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்துவதாக பலரும் பாராட்டினார்கள். கண்டிப்பு… அதே நேரம் கனிவு என சபையை வழி நடத்தும் இருபெருங்குணங்களோடு சபாநாயகர் அப்பாவு செயல்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட கூறினார்கள்.
இந்த நிலையில் இப்போது நடக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களே சபாநாயகருக்கு எதிராக தங்கள் உள்ளக்குமுறலை வெளிப்படையாக சபையிலேயே ஒலித்து வருகிறார்கள்.
வேல்முருகன் மிரட்டினாரா?
ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, துணைக் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். சபாநாயகர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களாக எழுந்து கேள்வி கேட்க அனுமதி அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய துணைக் கேள்விக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளிக்க எழுந்தார்.
அப்போது குறுக்கிட்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வேல்முருகன் கோபமாகப் பேசினார்.
”பேரவைத் தலைவரே இது நியாயமா? 3 நாட்களாக அவையில் துணைக் கேள்விக்கு வாய்ப்பு கேட்கிறேன் தர மறுக்கிறீர்கள்” எனக் கேட்டார் வேல்முருகன்.
அதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “உங்களுக்கு கடந்த மார்ச் 24, 28 ,30 ,31 ஆம் தேதிகளில் கேள்வி கேட்கவும் துணை கேள்வி கேட்கவும் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முக்கிய தீர்மானங்களின்போது கட்சி தலைவர் என்ற அடிப்படையில் தொடர்ந்து பேச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எல்லா நாளுமே கேள்வி கேட்பதற்கும் துணை கேள்வி கேட்பதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மரபு கிடையாது. பல உறுப்பினர்கள் இதுவரை ஒரு முறை கூட கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள்.
கட்சி சார்பிலோ உள்நோக்கத்தோடோ யாருக்கும் கேள்வி கேட்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்கக் கூடாது என்பது எனக்கு தெரியும். எந்த பாகுபாடும் இல்லாமல் தான் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அவையில் சத்தம் எல்லாம் போடக்கூடாது, மிரட்டல் விடுவதெல்லாம் கூடாது” என்று எச்சரித்து வேல்முருகன் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.
இதன் பின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ”எனது தொகுதி சார்ந்த நிஷா என்ற 18 வயது மாணவி நீட் பயிற்சி மையத்திற்கு சென்று திரும்பும்போது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மான கடிதம் வழங்கியும் சபாநாயகர் பேச அனுமதி வழங்கவில்லை. சபாநாயகர் மூத்த உறுப்பினர். அவரை ஒருபோதும் மிரட்டுவது போல் பேசியது கிடையாது. ஆனால் அவர் நான் மிரட்டுவது போல அவைக்குறிப்புகளில் பதிவு செய்து வருவது ஏற்புடையதல்ல”என்று வேல்முருகன் கூறினார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன், “சட்டம் படித்த நான், சட்டமன்ற விதிகளை தெரிந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்றபோது, நான் மிரட்டுவது போல அவைக்குறிப்பில் ஏற்றப் பட்டிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும். மூத்த உறுப்பினரான என்னை கடைசி இருக்கையில் அமரவைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை எனக்கு முன் அமர வைப்பது எந்த சட்டமன்ற விதிகளில் வருகிறது என்று தெரியவில்லை” எனச் சாடினார்.
”என்ன வார்த்தைனு நீங்களே சொல்லுங்க”-ஜவாஹிருல்லா
சபாநாயகர் அப்பாவு மீதான ஆளுங்கட்சியின் கூட்டணி உறுப்பினர்களின் அதிருப்தி இன்றும் (ஏப்ரல் 10) தொடர்ந்தது.
பல மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்கும் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசினார்கள்.
மமக தலைவரும் பாபாநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா பேசும்போது, ‘ஆளுநருக்கு தகுதி இல்லை’ என்று பேசினார். தகுதி என்ற வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார். உடனே பேராசிரியர் ஜவாஹிருல்லா, ‘அருகதை இல்லை’ என்று கூறினார். அதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்று கூறினார் சபாநாயகர்.
இதை எதிர்பாராத பேராசிரியர், ‘வேறு என்னதான் சொல்லுவது நீங்களே சொல்லுங்க’ என்று சலித்துக் கொண்டார். பிறகு ஆளுநருக்கு உரிமை இல்லை என்று வார்த்தையை மாற்றினார்.
எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள்- செல்வப் பெருந்தகை
இந்தத் தீர்மானத்தில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பேசும்போது தொடக்கத்திலேயே… “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே… இங்கே உறுப்பினர்கள் பேசும்போது கவனித்துக் கொண்டே இருந்தேன்.
எது பேசினாலும் எடுத்துவிடுகிறீர்கள். நான் அதற்குள் போகவில்லை. இந்த அவைக்குறிப்பில் என்ன இருக்கிறதோ அதை மட்டும்தான் பேசப் போகிறேன். அதை மட்டும் அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டு பேசுகிறேன்” என்று பேசி 1986 இல் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப் பட்டதை நினைவுபடுத்தினார்.
மேலும், “1995 ஆம் ஆண்டு ஒரு தீர்மானத்தை அதிமுக ஆட்சி முடியும்போது கொண்டுவந்தார்கள். அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டியை பற்றி அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது படித்தால் அதைக் கூட அவைக் குறிப்பில் இருந்து நீங்கள் எடுத்துவிடுவீர்கள்…
அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டதைதான் இப்போது இங்கே உறுப்பினர்கள் வெளிப்படுத்தினார்கள். ஆனால் அதையெல்லாம் நீங்கள் அவைக் குறிப்பில் இருந்து எடுத்துவிடுகிறீர்கள்” என்று மீண்டும் கூறினார்.
அப்போது பேரவைத் தலைவர் குறுக்கிட்டு, ‘நீங்க பேசியது எல்லாம் அவைக் குறிப்பில் இருக்கிறது’ என்று புன்னகைத்தபடியே கூறினார்.
சபாநாயகர் மீது எதிர்க்கட்சிகள் புகார் சொல்வதை எல்லா சட்டமன்றங்களிலும் பார்த்திருக்கிறோம். இன்று கூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘எங்கள் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு உரிய இடத்தை அளிக்கவில்லை’ என்று சபாநாயகர் மீது அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
ஆனால் ஆளுங்கட்சியான திமுகவின் தோழமை சட்டமன்ற உறுப்பினர்களே சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான தங்கள் குமுறல்களை, அதிருப்தியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். சிலர் இதை சட்டமன்றத்தில் பேசினாலும் பலர் வெளிப்படையாக பேசாமல் சக எம்.எல்.ஏ.க்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் குமுறி வருகிறார்கள்.
–வேந்தன்
ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷ் ஆஜராக சம்மன்!
திருப்பூரில் தயாரான பிரதமர் மோடியின் டீ சர்ட்!