முதல்வர் ஸ்டாலினை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை இன்று (அக்டோபர் 26) ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதன்பிறகு திமுக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது திருமாவளவன் கூறுகையில், “சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் முதல்வரைச் சந்தித்து பேசுவோம் என்று கூறியிருந்தோம். அவரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அப்போது முரசொலி செல்வம் இறந்த காரணத்தால் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை.
தற்போது அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
போராட்டத்தில் பங்கேற்ற முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளோம். நீதிமன்றத்தில் சங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் தொழிலாளர்களுக்கு எதிராக தொழிலாளர் நலத்துறை எந்த சூழலிலும் இருந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டினோம்.
மேலும் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் சிறு குறு தொழில்கள் நலிவடையக் கூடிய சூழலில் இருக்கும் நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சிறு குறு தொழில் முதலீட்டாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று முதல்வரிடம் சொன்னோம்.
அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்தார்” என்றார்.
கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “4 அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்திற்கு சுமூக தீர்வு கண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். சங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து தீர்க்க கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விமானங்களில் முழு தேங்காய்க்கு அனுமதியில்லை ஏன்?- சபரிமலை பக்தர்களுக்கு விலக்கு!