அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செந்தில்பாலாஜி மீது நிலுவையில் இருக்கும் ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி தமிழக அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கம் செய்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் முத்தரசன்
”தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. ஒரு மாநிலத்தில் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் முதல்வருக்கே உரியது என்று அரசியலமைப்பு சட்டம் கூறியுள்ளது.
ஆளுநருக்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை. முதல்வர் அடையாளம் காட்டும் நபருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பது தான் அவரின் வேலை.
ஆனால் தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் ஆளுநர் ரவி மூர்க்கத்தனமான, முட்டாள்தனமான வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சையான பேச்சால், வெளியிடும் அறிக்கையால் தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படுத்தி வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை குப்பையில் தூக்கி வீசி எறிந்துவிட்டு, தனக்கு தானே அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறார். அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். நீதிமன்றம் வழங்கவேண்டிய தீர்ப்பை ஆளுநர் வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை.”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
”ஆளுநர் இப்படி அத்துமீறி செயல்படுவதற்கு மோடி அரசு தான் முக்கிய காரணம். டெல்லி சென்று வந்தவுடன் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குகிறார். ஆளுநர். மோடி அரசு நாட்டை குட்டிச்சுவராக்குகிறது. அரசியலமைப்பு சட்டத்தை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆளுநருக்கு சொந்த புத்தியும், சுய புத்தியும் கிடையாது. டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார்.”
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
“செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. அதுமட்டுமல்ல ஆளுநரின் அதிகார வரம்பை மீறிய செயல். மாநிலத்தின் அதிகாரங்களைச் சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுகிறார். இவர் சிந்தனையில் வேறு சக்திகள் மேலிருந்து இயக்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஆளுநர் நீக்கியதை நீதிமன்றம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது.”
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
“அமைச்சரவையில் ஒருவர் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம். ஆளுநர் ரவி அரசியல் சட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்கு சென்றால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் குட்டப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநர் மனநோயாளி போன்று செயல்படுகிறார்: திருமாவளவன்
யார் இந்த சிவதாஸ் மீனா? தலைமை செயலாளரானது எப்படி?