திமுக… அதிமுகவுக்கு மக்களை பற்றி கவலையில்லை : உயர் நீதிமன்றம் வேதனை!

Published On:

| By Kavi

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்குமே மக்களை பற்றி அக்கறை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சி.வி.சண்முகம் மனு!

கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. எனினும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

செல்லூர் ராஜூ மனு!

மதுரையில் 2023ல் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இதை ரத்து செய்ய வேண்டும் என்று செல்லூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி விசாரணை!

இந்த மனுக்கள் நீதிபதி வேல்முருகன் முன் இன்று (நவம்பர் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், “அதிமுக கட்சி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களின் நகலும் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 300க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்கள். புலன் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.

அதாவது,  “மனசாட்சியே இல்லாமல் கல்லூரி மாணவிகளை எரித்த கட்சியினருக்கு தண்டனை குறைப்பு பெற்று, விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்ததுதான் இங்கு நடந்துள்ளது” என்று கூறினார் நீதிபதி வேல்முருகன்.

“திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும் மக்களை பற்றி கவலை. நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் இல்லை. மாறாக மாறி மாறி இருவரும் குறை சொல்வதே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள். தங்களுடைய சொந்த கட்சியை பற்றி மட்டுமே தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா… வேறு வழக்குகளை விசாரிக்க வேண்டாமா?

திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே போலீசார்தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் போலீசார் மீது குற்றம்சாட்ட வேண்டாம்” என்று அதிருப்தி தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆவணங்கள் தொடர்பான வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

அதுபோன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூறும் இல்லை என்று கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

’மோடி 100 மணி நேரம் உழைக்கும் போது, நாம் ஏன் உழைக்கக்கூடாது?’ : இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் மரணம் : உறவினர்கள் போராட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share