DMK AIADMK complete petition filing

திமுக, அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு : அடுத்த கட்டம் என்ன?

அரசியல்

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 2,475 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், திமுக சார்பில் மொத்தம் 2,984 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய, மாநிலக் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுகவும் மற்றும் எதிர்கட்சியான அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பில் வேகமாக செயல்பட்டு வருகின்றன.

திமுக நிர்வாகிகளின் விருப்ப மனு!

திமுகவை பொறுத்தவரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன.

எலக்‌ஷன் ஃபிளாஷ்: அருண் நேருவுக்கு எதிரான வேட்பாளர் யார்?

திமுக சார்பில் போட்டியிட புதிய உறுப்பினர்களாக பெரம்பலூர் தொகுதிக்கு அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு,  தென்சென்னை தொகுதிக்கு கழக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம்,

நெல்லை தொகுதிக்கு பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அரக்கோணம் தொகுதிக்கு அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி,

மத்திய சென்னைக்கு  திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிருஷ்ணகிரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் எஸ்.டி. இசை உள்பட பலர் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

DMK AIADMK complete petition filing

அதேபோல், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.

வரும் 10ஆம் தேதி நேர்காணல்!

இன்றுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தம் 2, 984 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 10ஆம் தேதி காலை 9.00 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த உள்ளார் என்றும்,

இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

DMK AIADMK complete petition filing

அதிமுக நிலவரம் என்ன?

அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுலகத்தில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

நேற்று மாலையுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 2,475 பேர் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து நேர்க்காணல் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK AIADMK complete petition filing

அதன்படி வரும் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.

மேலும் அதேநாளில் பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.

அதன்பிறகு 11ம் தேதியான திங்கட்கிழமை பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி தொகுதிகளுக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசு தேவை : ஸ்டாலின்

IPL 2024: அசுர ‘வளர்ச்சி’யில் ஹர்திக் பாண்டியா… ஆரம்ப ‘சம்பளம்’ எவ்ளோன்னு பாருங்க!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0