டிஜிட்டல் திண்ணை:  சீமான் கூடாரத்தை காலி பண்ண… காளியம்மாளை துரத்தும் கழகங்கள்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும், ஈரோட்டில் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கின.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமான் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று ஜனவரி 25ஆம் தேதி அவர் காலஞ்சென்ற, ஈவிகேஎஎஸ் இளங்கோவன் வீடு அருகே பிரச்சாரத்துக்கு சென்றபோது. ‘பெரியார் வாழ்க பெரியார் வாழ்க’ என்ற முழக்கத்தை எழுப்பி அவருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டுள்ளனர். திருமண மண்டபங்களில் தங்கி அவர்கள் தினமும் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறாரா என்று விசாரித்த போது, இன்று மாலை வரை அவர் வரவில்லை, சில நாட்களில் அவர் வருவார் என்று பதிலளித்தார்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.

இதே நேரம் காளியம்மாளைச் சுற்றி, மீண்டும் சில பரபரப்புகள் மையம் கொண்டிருக்கின்றன.

ஜனவரி 24ஆம் தேதி அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘இவர்கள் மட்டுமல்ல அங்கே இன்னும் இருப்பவர்களும் இங்கே வரவேண்டும்’ என்று இளைஞரணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதாவது உதயநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல் என்னவெனில்… நேற்று திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் இருந்தாலும் மக்கள் அறிந்த, ஊடகங்கள் அறிந்த முகங்கள் திமுகவில் இணைய வேண்டும். அவர்கள் மூலம் சீமானை தாக்க வேண்டும், அப்போதுதான் அது எடுபடும்’ என்பதுதான்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஸ்டார் பேச்சாளரும் பெண்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவருமான காளியம்மாள் உள்ளிட்டோரை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் அந்த கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் ஆரம்பத்தில் அதிமுகவை சேர்ந்தவர் தான் என்ற அடிப்படையில் அவரை மீண்டும் தங்களுடைய கட்சிக்கு இழுக்க அதிமுகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

டெல்டா பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் இது தொடர்பாக காளியம்மாளிடம் பேசி வருவதாகவும் டெல்டா வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

‘மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணான காளியம்மாள் அதிமுகவுக்கு வந்தால் பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்தோடு காளியம்மாளிடம் ஓ எஸ் மணியன் பேசி வருவதாக கூறுகிறார்கள்.

இதற்கிடையே காளியம்மாளைத் தங்கள் பக்கம் கொண்டு செல்வதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும் சில முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு சீமானுடைய தனிப்பட்ட உரையாடல்கள் ஆடியோக்களாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. அப்போது காளியம்மாளை,  ’பிசிறு’  என்ற வார்த்தை மூலம் சீமான் கடுமையாக விமர்சித்த ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிலிருந்து சீமான் மீது பெரிய வருத்தத்தில் இருக்கிறார் காளியம்மாள் என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலேயே பயணித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காளியம்மாள் ஆளுங்கட்சிக்கு செல்லப் போகிறார் என ஒரு தகவல் பத்திரிக்கையில் வர அதற்கு தனது எக்ஸ் பக்கத்திலேயே பதிலும் அளித்திருந்தார் காளியம்மாள்.

‘உங்களுடைய கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என கடந்து போனால் விதவிதமாக கதை எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். சமூக ஊடகமான வலையொலிகளில் கதை சொன்னது போக பத்திரிகைகளும் எழுதத் தொடங்கி விட்டது’ என்று தெரிவித்து இருந்தார் காளியம்மாள்.

ஆனாலும் இப்போது காளியம்மாளை தங்கள் பக்கம் கொண்டு செல்ல திமுக, அதிமுக, தவெக என மூன்று கழகங்களும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share