அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து போஸ்டர் ஒட்டிய இரண்டு திமுக நிர்வாகிகள் இன்று (செப்டம்பர் 3) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் நேற்று திடீரென தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் ’இன்பநிதி பாசறை’ என்றும் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் இந்த பாசறை மூலம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வந்தன. ஏற்கெனவே கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில் இன்பநிதியின் போஸ்டர், திமுக வாரிசு அரசியலின் நான்காவது தலைமுறையா என்ற கேள்வியை எழுப்பியது.
புதுக்கோட்டையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் குறித்து சமூக வலைதளங்களிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான கருத்துகளை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி மகன் இன்பநிதி போஸ்டர் ஒட்டிய புதுக்கோட்டை திமுக மாவட்ட நிர்வாகிகளான புதுக்கோட்டை மணிமாறன், திருமுருகன் ஆகியோர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கெனவே வாரிசு அரசியல் சர்ச்சையை திமுக எதிர்கொண்டுள்ள நிலையில், தற்போது ஒட்டப்பட்ட இன்பநிதியின் போஸ்டர் அதற்கு வலு சேர்த்தது. இந்த நிலையில் திமுக தலைமையின் இந்த அறிவிப்பு அக்கட்சியில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: இந்திய விமான ஆணையத்தில் பணி!