கல்வீச்சு தாக்குதல் : திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் நீக்கம்!

அரசியல்

திருச்சியில் நேரு-சிவா ஆதரவாளர்கள் இடையே இன்று (மார்ச் 15) நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து திமுகவில் இருந்து 4 நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்சி ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் புதிதாக கட்டப்பட்ட இறகுப்பந்து மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு திருச்சி சிவா அழைக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள், மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் நேரு சென்றபோது அவரது காரை வழிமறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மைதானம் திறப்பு விழா முடிந்ததும் நேரு திரும்பிய நிலையில், அவரது ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார், நாற்காலி, இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கினர்.

dmk 4 persons suspended from party

இதற்கிடையே திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேரை கைது செய்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கும் சென்ற அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், கைது செய்யப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவைச் சேர்ந்த நான்கு நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 15) வெளியிட்ட அறிக்கையில், ”திருச்சி மத்திய மாவட்டத்தைச்‌ சேர்ந்த தலைமைச்‌ செயற்குழு உறுப்பினர்‌ காஜாமலை விஜய்‌, மாவட்ட துணைச்‌ செயலாளர்‌ தி.முத்துசெல்வம்‌, மாவட்டப்‌ பொருளாளர்‌ எஸ்‌.துரைராஜ்‌, 55வது வட்டச்‌ செயலாளர்‌ வெ.ராமதாஸ்‌ ஆகியோர்‌ கழகக்‌ கட்டுப்பாட்டை மீறியும்‌, கழகத்திற்கு அவப்பெயர்‌ ஏற்படும்‌ வகையிலும்‌ செயல்பட்டதால்‌, அடிப்படை உறுப்பினர்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பொறுப்பிலிருந்தும்‌ தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்‌” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆருத்ரா, ஹிஜாவு மோசடி: இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? – ஐ.ஜி விளக்கம்

பரவும் காய்ச்சல்: தமிழ்நாட்டில் விடுமுறையா? – அமைச்சர் விளக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
1