வைஃபை ஆன் செய்ததும் தற்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசிக் கொண்டிருக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மாநிலமான ஒடிசாவில்… முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை திமுக சார்பில் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோர் சந்தித்த வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. dmdk will join dmk alliance?
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மக்களவைத் தொகுதி டி லிமிடேஷன் மூலமாக தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற நிலையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இந்த எட்டு மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கும் வேலைகளை திமுக தீவிரமாக செய்து வருகிறது.

இதன் முதல் கட்டமாக ஒடிசா சென்று முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவும் தயாநிதி மாறன் எம் பியும் இன்று சந்தித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கடிதத்தை அவர்கள் பட்நாயக்கிடம் அளித்தனர். மார்ச் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்கு பிரதிநிதியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
இந்த விவகாரம் மாநில உரிமைகள் தொடர்பானது மட்டுமல்லாமல், திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மட்டுமில்லாமல் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் கூட இந்த விஷயத்தில் திமுகவை ஆதரிக்கின்றன. dmdk will join dmk alliance?
இந்த நகர்வின் முக்கிய அம்சமாக அதிமுக கூட்டணியில் இருக்கிற தேமுதிக கூட திமுக கூட்டணிக்கு வரலாம் என்கிற ஒரு பேச்சு அறிவாலய வட்டாரத்தில் தொடங்கி இருக்கிறது.
வருகிற ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆறு ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதில் அதிமுக கூட்டணி சார்பாக இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, ‘எங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக ஏற்கனவே அதிமுக உறுதி தந்துள்ளது. எனவே எங்கள் கட்சி சார்பில் யார் எம்.பி. என்பதைத்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று நம்பிக்கையோடு கூறியிருந்தார்.
ஆனால் அதற்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘ராஜ்யசபா சீட் தருவதாக யார் சொன்னது?’ என எதிர் கேள்வி எழுப்பினார். இதனால் தேமுதிகவின் ராஜ்யசபா கனவு தகர்ந்து போனது.
இதற்குப் பிறகு அதிமுக கூட்டணி தொடர்பான அணுகு முறையில் பிரேமலதா சில மாற்றங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தொடர்ந்து கூறிவந்த பிரேமலதா, இந்த ராஜ்யசபா ஏமாற்றத்திற்குப் பிறகு… ‘தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. இப்போதே கூட்டணி பற்றி ஜோசியம் கூற முடியாது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். அதாவது அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தியை தான் இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா.
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளை கையாளுகிற பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ. வேலு தரப்பிலிருந்து தேமுதிகவிடம் பேசப்பட்டிருக்கிறது.

‘2026லும் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராக போகிறார். திமுக கூட்டணி இந்த நொடி வரைக்கும் மிக வலிமையாக இருக்கிறது. இதே நிலைதான் தொடரும். அதிமுகவில் பெரிய குழப்பங்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் திமுக கூட்டணிக்கு வந்து விடுங்கள்’ என்று தேமுதிக தலைமையில் உள்ள சிலருக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.
’இப்போதே நாங்கள் திமுக கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு ராஜ்ய சபா தருவீர்களா?’ என தேமுதிக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. dmdk will join dmk alliance?
ஆனால், ‘எட்டு வருடங்களாக எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பல இருக்கின்றன. இந்நிலையில், நீங்கள் வந்த இரண்டு மாதத்தில் கொடுத்தால் நன்றாக இருக்காது. அதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். 2026 இல் உங்களுக்குரிய இடங்கள் அளிக்கப்படும். எனவே திமுக கூட்டணிக்கு வாருங்கள்’ என தேமுதிகவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில் தான் அதிமுக கூட்டணி என்பதில் உறுதியாக இருந்த பிரேமலதா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்று பல்லவியை மாற்றி பாடத் தொடங்கியிருக்கிறார்.
திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அதிமுக படாத பாடு பட்டு வருகிறது. ஆனால் சத்தம் இல்லாமல் அதிமுக கூட்டணியை உடைத்து அதிலிருந்து தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வரும் வேலைகள் ரகசியமாக ஆரம்பித்துவிட்டன என்பதுதான் அறிவாலயத்தில் இருந்து கிடைக்கும் ஹாட் அப்டேட்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸப்.