தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகத்தினரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வெளியிட்டுள்ள செய்தியில்,
“அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர், தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டவர், முன்னாள் நடிகர் சங்கத் தலைவர், தமிழக மக்கள் கேப்டன் என அழைத்து கொண்டாடும் மிகவும் நெருங்கிய என் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களுடன் நீண்ட பயணம் கொண்ட எனக்கு கண்ணீர் விட்டு கதறியும் மனம் ஆறுதல் அடையாத துயர தினம்.
சிறு வயது முதல் கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறி, மக்கள் மனம் கவர்ந்த கேப்டன் அவர்களின் மனிதநேயமிக்க குணமும், கருணையான உள்ளமும் என்றென்றும் போற்றுதலுக்குரியது. நடிகராக இருந்தபோதும், அரசியலில் காலூன்றிய பிறகும் தன்னிடம் உதவி என்று வருபவர்களுக்கு பெருமளவு உதவி செய்த அன்புள்ளம் கொண்ட மனிதருடன் புலன் விசாரணை துவங்கி பல படங்கள் இணைந்து நடித்து பழகிய அற்புத நாட்களை இத்தருணத்தில் நினைவுகூறுகிறேன்.
அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார் சரத்குமார்.
–வேந்தன்
“ஒரு நல்லவரை இழந்துவிட்டோம்” : தமிழிசை இரங்கல்!
தேமுதிக அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்படும் விஜயகாந்த் உடல்!