2026 சட்டமன்ற தேர்தலுக்கு ரெடி ஆகுங்க… தேமுதிக மா.செ கூட்டத்தில் தீர்மானம்!

அரசியல்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 10) அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…

தீர்மானம்: 1

வரும் டிசம்பர் 28-ஆம் தேதி மறைந்த  தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை ஒட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவோம்.

தீர்மானம்: 2 

திமுக அரசு டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாமல் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறுவதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும் என்றும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 3

தமிழ்நாடு முழுமையாக போதை மாநிலமாக மாறிவருகின்ற நிலைமையை தேமுதிக அச்சத்துடன் பார்க்கிறது. கஞ்சா, மது, கள்ளச்சாராயம், போதை பொருட்களால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கப்படுவதுடன், மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய நிலைமை தமிழ்நாட்டில் முதல் முறையாக அரங்கேறியிருப்பது அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை சம்பவமும், சைபர் கிரைம் அதிகமாக பெருகுவதையும், பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 4

வரும் டிசம்பர் மாதம் தமிழகத்தில் குறிப்பாக சென்னையிலும், மற்ற மாவட்டங்களிலும் கடுமையான மழை பொழியப்போகிறது என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தற்போது வரை திமுக அரசு  எடுத்ததாக தெரியவில்லை.

அரசு தீவிரமான ஆலோசனையுடன் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து, மக்களை காப்பாற்றிட வேண்டும் என்று தேமுதிக கேட்டுக்கொள்கிறது.

மேலும், ஏற்கனவே இயற்கை பேரிடர் காரணமாக தமிழநாடு முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவதுடன், போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு அசாதாரணமாக சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதை போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 5

தமிழகத்தில் மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை தேமுதிக கடுமையாக கண்டிப்பதுடன், ஏற்றிய சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 6

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வுகாண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

 தீர்மானம்: 7

மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்று கூறிய திமுக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்டதை தேமுதிக கடுமையாக கண்டிப்பதுடன், உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 8

தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வழியாக கனரக வாகனங்கள் மூலம் கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்படுவதை, தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டிப்பதுடன், உறங்கும் அரசே விழித்துக்கொண்டு செயலாற்றிட வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 9

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மின்சாரக்கட்டணம் மூன்று முறை அதிகமாக உயர்த்தி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாத இந்த அரசை கடுமையாக எச்சரிப்பதுடன், உடனடியாக உயர்த்திய கட்டணத்தை திரும்பப் பெற்று மக்களை வாழ வைக்குமாறு தேமுதிக கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம்: 10

ஆட்சி பலம், அதிகார பலம் ஆகியவற்றை எதிர்கொண்டு, வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை அமைத்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும், நம் தமிழ்நாட்டிற்காகவும், தமிழக மக்களுக்காகவும் விஜய்காந்த் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திரா செளந்தர்ராஜன் மறைவு… ஸ்டாலின், அண்ணாமலை இரங்கல்!

துடுப்புகள் இல்லாத படகு… ஆரம்ப சுகாதார நிலையங்களின் அவலங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0