தமிழக அரசின் அண்மைக்கால செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக இருப்பதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று (ஆகஸ்டு 1) பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து சற்று விலகி இருக்கும் விஜயகாந்துக்கு, சர்க்கரை நோய் அதிகரித்ததால் அண்மையில் அவரது வலது காலில் இரு விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
அவ்வப்போது விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் தைராய்டு பாதிப்பும் இருப்பதால் சில காலமாகவே அவரால் சரிவர பேச இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வரும் விஜயகாந்த் கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருகிறார். தற்போது ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு கிடைத்திருப்பதற்கும், செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடப்பதற்கும், அரசின் காலை உணவு திட்டத்திற்கும் அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழக காவல்துறை பணியாற்றி வருவதாக பேசப்படும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில், ஜனாதிபதியின் சிறப்பு கொடி தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட ஒன்பது மாநில போலீசாருக்கு ஜனாதிபதி சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாநிலங்களில் முதலாவதாகவும், இந்தியாவில் 10வது மாநிலமாகவும், ஜனாதிபதியின் சிறப்பு கொடி, தமிழக போலீசாருக்கு வழங்கப்பட்டிருப்பது, ஒட்டு மொத்த காவல்துறைக்கும் கிடைத்த பெருமை.
மேலும் தமிழகத்தில் டிஜிபி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் தமிழ்நாடு அரசு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
சட்டம் ஒழுங்கை பாதுகாத்து காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லுக்கு இணங்க மக்களுக்கும் நாட்டிற்கும் பாதுகாப்பாக இருந்து இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறையின் பணிகள் சிறக்க வேண்டும் என பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
தமிழக போலீசாரின் சேவையை பாராட்டி ஜனாதிபதியின் சிறப்பு கொடி கிடைத்தது போற்றுதலுக்கு உரியது. இது காவல்துறையில் இருக்கும் அனைவருக்குமே கிடைத்த பெருமை” என்று அவர் கூறியுள்ளார். விஜயகாந்த் சினிமாவில் நடித்தபோது பல படங்களில் துடிப்பான நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தது குறிப்பிடத் தக்கது.
அதேபோன்று, “அனைத்து உலக நாடுகளும் பாராட்டும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறந்த முறையில் நடந்து வருகிறது. இதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை சென்னை ஈர்த்துள்ளதோடு, செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. குறுகிய காலத்தில் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி வரும் தமிழக அரசின் செயல் பாராட்டுக்குரியது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று விஜயகாந்த் பாராட்டி இருக்கிறார்.
”தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயித்து 95 மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறேன்.
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும். மதிய உணவு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போன்று காலை சிற்றுண்டி திட்டத்தையும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தூண்டு கோலாக அமையும்” என்று அரசின் செயல்பாடுகளை பாராட்டி தள்ளியிருக்கிறார் விஜயகாந்த்.
உடல் நலம் குன்றியிருந்தாலும் நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்து ரியாக்ட் செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். கடந்த காலங்களில் தேமுதிக கூட்டணியை தேர்ந்தெடுப்பதில் குளறுபடிகள் பல செய்த நிலையில்… திமுக அரசின் மீது பாராட்டுச் சரங்களை வீசியிருக்கும் விஜயகாந்தின் கருத்துகள் அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படுகிறது.
–கலை
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை!