நடைபெற இருக்கும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது அதிமுக.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சாலிகிராமம் வீட்டிற்கே நேரடியாகச் சென்று கூட்டணி தொடர்பாக பேசிவிட்டு வந்தனர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பாமக, தேமுதிக இரண்டையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள தீவிரமாக முயற்சித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி.
பாமக 9 மக்களவை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் வேண்டுமென்று அதிமுகவிடம் கேட்டது. இறுதியில் 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா என்று முடிவான நிலையில் திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக.
பாமகவுடன் கூட்டணி முயற்சிகள் நம்பிக்கை தரும் விதத்தில் இருந்ததால், தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையை கொஞ்சம் ஆரப்போட்டு வைத்திருந்தது அதிமுக தரப்பு. இதற்கிடையில், பாஜக பிரமுகர்கள் விஜயகாந்தின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு கூட்டணிக்கு அழைத்துள்ளனர்.
அப்போது பாஜகவிடம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குடும்பத்தினர் முக்கியக் கோரிக்கையாக ராஜ்யசபா சீட்டு ஒன்றும், ஐந்து மக்களவை தொகுதிகளும் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். பாஜக தரப்பு மூன்று மக்களவை தொகுதிகளுக்கு ஓகே சொல்லியுள்ளது. ஆனால், ராஜ்யசபா சீட்டிற்கு தற்போது உத்திரவாதம் தர முடியாது என்றும் தேர்தலுக்குப் பிறகு அது பற்றி பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
அதே கோரிக்கையான 5 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா என்பதை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவிடமும் பிரேமலதா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதிமுக தலைமையும் ராஜ்யசபா சீட்டிற்கு உத்திரவாதம் கொடுக்க முடியாது, மக்களவை தொகுதிகள் வேண்டுமென்றால் 3 அல்லது 4 வரை கொடுக்கலாம் என்று பேசியுள்ளனர். சில நாட்கள் அவகாசம் கொடுங்கள் சொல்கிறோம் என்று கூறிவிட்டு தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுள்ளது தேமுதிக.
இந்த நிலையில் மீண்டும் பாஜகவின் பார்வை தேமுதிகவை நோக்கி திரும்பியுள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணியை உறுதி செய்வதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணியில் பதவி எங்களுக்கு முக்கியமல்ல: தமிமுன் அன்சாரி
CWC 5: நிகழ்ச்சியில் களமிறங்கும் ‘வேற லெவல்’ போட்டியாளர்கள்!