ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு செலுத்த வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சி துண்டை அணிந்திருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது தொகுதியான ஈரோடு கிழக்கிற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 27) காலை தொடங்கித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் கட்சித் துண்டுடன் வாக்குச்சாவடிக்கு வந்ததால் அவருக்கு வாக்களிக்க முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவருக்கும் தேர்தல் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கட்சித் துண்டை அகற்றிவிட்டு வருமாறு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தினர். தொடர்ந்து கட்சி துண்டை அகற்றிவிட்டு வந்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.

அக்ரஹாரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் உள்ளே வரும் போது கட்சிக்கு உண்டான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.
வேட்பாளர் என்ற முறையில் அணியலாமா என்று கேட்டேன். அது விதிமுறை மீறல் என்றார்கள். இதையடுத்து துண்டை அகற்றிவிட்டு வாக்களித்தேன். அனைத்து மக்களும் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்டு எடுக்கும் வேட்பாளர் யார்? என்பதை யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
பிரியா
5 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் மாற்றம்: மாவட்ட ஆட்சியர்!
மக்கள் மாற்றத்துக்காகக் கிளம்பி வர வேண்டும்: நாம் தமிழர் வேட்பாளர்!