கர்நாடகா அடுத்த முதல்வர் யார்?: ராகுல் – கார்கே ஆலோசனை!

அரசியல் இந்தியா

கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கர்நாடகாவில் மே 13-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவுகிறது. மே 14-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சித்தராமையா டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இன்று டி.கே.சிவகுமார் டெல்லி சென்றுள்ளார். மல்லிகார்ஜூன கார்கே தனது இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக டெல்லி செல்வதற்கு முன்பாக கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “கட்சி என்பது எனக்கு கடவுள். கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியதில் நான் முக்கிய பங்காற்றினேன். ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்.

காங்கிரஸ் கட்சியில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களிடம் 135 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நான் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரையும் பிரிக்க நினைக்கவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்சியினுடைய தலைவர் என்பதால் நான் பொறுப்புடன் செயல்படுவேன். நான் யாருடைய முதுகிலும் குத்தவும் மாட்டேன். யாரையும் மிரட்டவும் மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அதிமுக சட்ட விதிகள் ஏற்பு: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

ஸ்டாலினை சந்தித்த யெச்சூரி: பேசப்பட்டது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *