கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் இன்று (மே 15) டெல்லி செல்லவில்லை என்றும், முதல்வர் வேட்பாளர் தேர்வு குறித்த முடிவை கட்சி மேலிடத்திற்கு விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை வென்று ஆட்சியை தனிபெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
எனினும் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேற்று இரவு பெங்களூரு தனியார் விடுதியில் நள்ளிரவு வரை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை. மேலும் முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இருவரும் இன்று டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை சந்தித்து வாழ்த்து கூற ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன் காலையில் இருந்தே குவிந்து வருகின்றனர். அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற சிவக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் டெல்லி பயணம் குறித்து கேட்டபோது, “இன்று எனது பிறந்தநாள். என்னை சந்திக்க கட்சியினர் வந்து கொண்டிருக்கின்றனர். அதனால் நான் இப்போது டெல்லிக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
முதல்வர் பதவி குறித்த முடிவை கட்சி மேலிடத்துக்கு விட்டுவிட்டேன். கட்சி எனக்கு என்ன பணி கொடுத்தாலும் அதை நான் செய்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று சித்தராமையா மட்டுமே டெல்லி செல்ல உள்ளார். இதற்கிடையே டி.கே.சிவக்குமாரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று ஒக்கலிகா சமூக சாமியார்களும், சித்தராமையாவை தேர்வு செய்ய குருபா சமூகத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் லிங்காயத், தலித் சமூகங்களுக்கு துணை முதல்வர் பதவியும் கேட்டு நெருக்கடி எழுந்துள்ளது.
இதனால் இருவருக்கான போட்டியாக இல்லாமல், தற்போது பல்வேறு சமுதாயத்திற்கான போட்டியாக முதலமைச்சர் பதவி மாறியுள்ளது.
இதனால் கர்நாடக முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. எனினும் அதனை மல்லிகார்ஜூன கார்கே இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல்வர் பதவிக்கு மோதல்: சிவக்குமார், சித்தராமையாவின் அடுத்த மூவ் என்ன?
அடுத்தவருக்கு குறிவைத்து வெடிகுண்டு செய்த ரவுடி கவலைக்கிடம்!
போட்டித் தேர்வுகள்: அரசு மணிமண்டபங்களைப் பயன்படுத்த இறையன்பு அறிவுறுத்தல்!
அட்டகாச அப்டேட்டை கொடுத்த ட்விட்டரின் புதிய சிஇஓ