கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் நீடித்து வரும் குழப்பத்திற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று (மே 16) காலை டெல்லி செல்கிறார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் வென்றும் அடுத்த முதல்வர் யார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரில் ஒருவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (மே 14) இரவு நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து இருவரும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
இதனையடுத்து நேற்று மாலை டெல்லி சென்ற சித்தராமையா, காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ”பொறுத்திருந்து பார்ப்போம்… என்ன முடிவு எடுக்கப்பட்டு வருகிறது என்பது எனக்கு தெரியாது” என்று அமைதியாக சென்றார்.
அதே வேளையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய சிவகுமார், உடல்நிலை காரணமாக டெல்லி செல்லவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
”என் உடல்நிலை என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல், ரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளது. அதனால் டெல்லி செல்லவில்லை.” என்றார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
இதற்கிடையே நேற்று மாலை டெல்லி சென்ற சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்துப் பேசினார்.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் இன்று காலை விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதனை அவரது சகோதரர் டி.கே.சுரேஷும் உறுதி செய்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து 3 நாட்கள் ஆன நிலையில் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் முடிவு எடுக்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில் சிவகுமார் டெல்லி செல்வதை அடுத்து இன்று மாலைக்குள் கர்நாடகா முதல்வர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கர்நாடகாவுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளச்சாராயம்: தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை!
பார்வையாளர்களை உலுக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர்