தீபாவளி பண்டிகை முடிந்து இன்றைய தினம் (நவம்பர் 4) அனைவரும் சென்னைக்கு திரும்பி விட்டனர். தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஊரில் இருந்து போன் வந்தாலும், நண்பர்களை சந்தித்தாலும் “எப்போம் ஊருக்கு போறீங்க? டிக்கெட்லாம் போட்டாச்சா?” என்ற கேள்விகள் தான் நம்மை நோக்கி வந்து விழுந்தது.
ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட மக்கள் முண்டியடித்துக் கொண்டு, தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல், பஸ் கட்டணம் உயர்வு போன்ற பல பிரச்சனைகளில் சிக்கித்தவிப்பார்கள்.
அதேபோல, கடந்த பொங்கல் பண்டிகையின் போது முதன்முறையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கு எங்கு சென்று பஸ் ஏறுவது? கிளாம்பாக்கம் வரை பயணிக்க வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. மேலும், அந்த நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசுக்கு இரட்டை தலைவலியாக அமைந்தது.
அதனால், இந்த தீபாவளி பண்டிகையின் போதும் ஏதாவது பிரச்சனை ஏற்படுமோ என்று ஒருவித தயக்கத்தில் தான் பொதுமக்கள் இருந்தனர். பொதுமக்கள் எந்தவித இன்னல்களையும் சந்திக்காமல் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு முழு முனைப்புடன் அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டது.
தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பே தலைமை செயலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர்.
இந்த கூட்டத்தில், “பொதுமக்கள் மகிழ்ச்சியாக தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்து தீபாவளியை கொண்டாட வேண்டும். பயணிகளுக்கு எந்தவிதமாக அசெளகரியமும் ஏற்படக்கூடாது. போக்குவரத்தில் எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது” என்று மிகவும் ஸ்ட்ரிக்டாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “தீபாவளியை ஒட்டி, அக்டோபர் 28 முதல் 30 வரை 7,740 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு பின்பு 12,846 பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு என்ற பிரச்சனை தலைதூக்கிவிடும். அதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் தான் இயக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி அறிவுறுத்தினார் அமைச்சர் சிவசங்கர்.
இந்த முறை பயணிகளின் தேவைக்காக தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதற்கு அமைச்சர் சிவசங்கர் அவரது ஸ்டைலில், “நம்ம வீட்ல குடும்பத்துல இருக்குறவங்களுக்கு சமைப்போம். திடீர்னு விருந்தினர்கள் வந்துட்டா கூடுதலா சமைப்போம். அது பத்தலனா பக்கத்துல இருக்குற கடையில உணவு வாங்கி கொடுப்போம். அதுபோல தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்வதற்கான மக்கள் தொகை அதிகரித்து வருவதால் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகை எடுத்து இயக்கி வருகிறோம்” என்று பதிலளித்தார்.
தீபாவளியை ஒட்டி அக்டோபர் 27-ஆம் தேதி முதல் தொடர் ஆய்வில் இறங்கினார் அமைச்சர் சிவசங்கர். அன்றைய தினம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகளின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுடன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாதவரம், கோயம்பேடு, கிளாம்பாக்கம் என பேருந்து நிலையங்களையே இரவு பகலாக சுற்றி சுற்றி வந்தார் சிவசங்கர். பேருந்துகளில் ஏறி, பயணிகளிடம் “ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருக்கிறது” என்று ஃபீட்பேக் கேட்கவும் அவர் தவறவில்லை.
நடத்துனர்கள், ஓட்டுனர்களிடம், “கவனமா பஸ் ஓட்டணும். பொதுமக்கள கரெக்ட் டைமுக்கு கொண்டு போய் ஊர்ல விட்ரனும்” என்று அன்போடு அட்வைஸ் செய்து தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார்.
அமைச்சரின் செயல்பாடுகளைப் பார்த்த பலரும், சென்னையில இருந்து கடைசி பஸ் கிளம்புன பிறகு தான் இவரு ஊருக்கு கிளம்புவாரு போலையேன்னு சோஷியல் மீடியாக்களில் மீம்ஸ் போட தொடங்கிவிட்டனர்.
தீபாவளி முடிந்த கையோடு சேலம், திருச்சி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ரிட்டர்ன் பஸ்களை கவனிக்க தொடங்கிவிட்டார் அமைச்சர் சிவசங்கர். தமிழக அரசின் நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பேருந்துகளில் 75 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர் நம்மிடம் பேசியபோது, “தீபாவளி பண்டிகையை ஒட்டி எந்த இடத்திலும் பேருந்துகளை கட் செய்யவில்லை. அந்தந்த பகுதியில் இயங்கும் பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு கிளாம்பாக்கத்தில் நானும் போக்குவரத்துதுறை செயலாளர் பணீந்திர ரெட்டியும் ஆய்வில் ஈடுபட்டிருந்தோம்.
அனைத்து டிப்போ எம்.டி., ஜி.எம்., பி.எம்., அதிகாரிகளிடமும் அன்றைய தினம் இரவு மட்டும் கண்விழித்து வேலை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தோம். பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படக்கூடாது என்று கண்காணிக்க சொல்லியிருந்தோம். பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 100 எம்.டி,சி பேருந்துகள் இயக்கப்பட்டது.
தீபாவளி முடிந்த பிறகு பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்யும் சேலம், திருச்சி, மதுரை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். சென்னையில் இருந்து 5.75 லட்சம் பயணிகள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல 5.75 லட்சம் பயணிகள் ரிட்டர்ன் வந்துள்ளனர்” என்றார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர் சென்று திரும்புவதற்காக அதிவிரைவுப் பேருந்தைப் போல பணியாற்றிய அமைச்சர் சிவசங்கருக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வணங்காமுடி, செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
தென்னிந்தியாவின் எஃகு கோட்டை… இந்தியா டுடே பட்டியலில் இடம்பிடித்த ஸ்டாலின்