வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ஏற்கனவே மின்னம்பலத்தில் வெளியான, ‘திமுகவில் அதிசயம் பாயும் பணம்’ என்ற தலைப்பிலான செய்தியின் லிங்க்கை அனுப்பி வைத்த ஃபேஸ்புக் மெசஞ்சர் தொடர்ந்து செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆனபோதும் உயர் நிலையில் இருக்கும் சிலரைத் தவிர பிற திமுக நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆட்சிக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை தங்களுக்குள் வெளிப்படையாகவே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
பிரயோஜனம் என்றால் அவர்களின் பாஷையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம்.
அதிமுக ஆட்சியில் பல டெண்டர்கள், திட்டப் பணிகள் மூலம் அக்கட்சியின் கடை நிலை நிர்வாகிகள் வரை கரன்சி வெள்ளம் பாய்ந்தது. ஆனால், இப்போது திமுக ஆட்சியில் அப்படிப்பட்ட பாசனம் ஏதும் நடைபெறவில்லை என்பதுதான் திமுக நிர்வாகிகளின் ஏக்கம். இதை உணர்ந்து பொதுக்குழுவின் போது ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மூலமாக நிர்வாகிகளுக்கு பணப் பாசனம் நடத்த உத்தரவிடப்பட்டது.
அதாவது ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கு எல்லாம் தலா 2 லட்ச ரூபாய், எம்.எல்.ஏ.க்களுக்கு 5 லட்ச ரூபாய்… மாவட்டச் செயலாளர்களுக்கு அதாவது அமைச்சர் பதவியில் இல்லாத மாவட்டச் செயலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் வருடத்துக்கு மூன்று முறை வீதம் என்றும், கிளைச் செயலாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் என்றும் இந்த மாதம் முதல் வழங்கப்பட இருக்கிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
பொதுக்குழுவின் போதே சில மாவட்டங்களில் இது அமல்படுத்தப்பட்ட நிலையில் இப்போது பல மாவட்டங்களில் தீபாவளியை ஒட்டி திமுக நிர்வாகிகளுக்கு பட்டுவாடா வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் புதிதாக மாசெ ஆகியிருக்கும் தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளரான பேராசிரியர் பழனியப்பன் தனது மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் இருக்கும் அனைத்து கிளைச் செயலாளர்களுக்கும் தலைமை கொடுக்கச் சொன்ன தலா 3 ஆயிரம் ரூபாயை கொடுத்ததோடு விட்டுவிட்டாமல்…கிளைக் கழகத்தில் இருக்கும் மற்ற நிர்வாகிகள், ஊர் திமுக முக்கியஸ்தர்கள் என ஒவ்வொரு கிளைக்கும் சுமார் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிளைச் செயலாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதி வைத்துக் கொண்டு அவர்களின் வீடு தேடிச் சென்று பணத்தைக் கொடுத்து டிக் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள் மாசெ பழனியப்பனின் குழுவினர்.
பழனியப்பனின் மாவட்டத்தில் பட்டுவாடா இப்படி என்றால், தர்மபுரி தெற்கு மாவட்டச் செயலாளரான தடங்கம் சுப்பிரமணி கிளைச் செயலாளர்களின் சீனியாரிட்டிக்கு ஏற்ற வகையில் 2500 ரூபாய், 3ஆயிரம் ரூபாய் என்று கொடுத்ததோடு ஒரு லாரி லோடு பட்டாசு பாக்ஸுகளை இறக்குமதி செய்து அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்திருக்கிறார்.
தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமல்ல… பல மாவட்டங்களிலும் திமுகவினருக்கு தீபாவளி பட்டுவாடா தொடங்கி தடாலடியாய் நடைபெற்று வருகிறது. திமுகவில் பொதுவாய் தீபாவளியை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால், இந்த தீபாவளிக்கு கிளைச் செயலாளர்கள் வரை பாயத் தொடங்கியிருக்கிறது பணம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது மெசஞ்சர்.
ரவீந்திரநாத்தை தான் சிறை பிடிக்க வேண்டும், மேனேஜரை அல்ல: தகிக்கும் தங்கத் தமிழ் செல்வன்
வாடகைக் தாய் மகப்பேறு: எத்தனை நாள் விடுமுறை?