திமுகவின் உட்கட்சித் தேர்தல் க்ளைமாக்ஸை அடைந்துள்ளது. உச்சகட்டமான மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பற்றிய அறிவிப்பை தலைமைக் கழகம் வெளியிட்ட அதேநேரம் அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளராக யாரை நியமிப்பது, யாரை நீக்குவது என்ற பஞ்சாயத்துகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
எம்பி தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின்.
அதன்படியே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரை பற்றிய செயல்பாட்டு மதிப்பீட்டு ஆய்வை ரகசியமாக நடத்தினார். சபரீசனின் மேற்பார்வையில் நடந்த இந்த ஆய்வில் திமுகவின் மொத்த மாவட்டச் செயலாளர்களையும் பச்சை. மஞ்சள், சிகப்பு என்ற தரவரிசைப்படி பட்டியலிட்டனர்.
இதை மின்னம்பலத்தில் 15 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், ஸ்டாலின் கையில் ரெட் லிஸ்ட்! என்ற தலைப்பில் முதன்முதலில் வெளியிட்டோம்.
பச்சை நிறப் பட்டியலில் வந்தவர்கள் சிறப்பாக செயல்படுபவர்கள். அவர்களின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மஞ்சள் நிற தரவரிசையில் வந்தவர்கள் பரவாயில்லை ரகம். ஆனால் மிக மோசமாக கட்சியை நடத்திய மாவட்டச் செயலாளர்கள் சிகப்பு நிற பட்டியலில் வந்தார்கள்.
இந்த சிகப்புப் பட்டியலில் சுமார் 15 பேர் வந்திருக்கிறார்கள். அவர்களை மாற்றியமைத்து புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்பதில் கட்சித் தலைவரான ஸ்டாலின் உறுதியாக இருந்தார்.
ஆனால் இந்த சிகப்புப் பட்டியலில் இருக்கும் மாசெக்கள் இந்த தகவலை தெரிந்துகொண்டு ஸ்டாலினை பல்வேறு வகைகளில் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்த வகையில் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரான ஆவுடையப்பன் தனது பதவி பறிபோக இருந்த நிலையில் கடைசி நேர முயற்சியில் தான் தப்பித்துவிட்டதாக தனது உறவினர்களிடமும் தனக்கு நெருக்கமான கட்சிப் பிரமுகர்களிடமும் சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்.
என்ன நடந்தது, என்ன நடக்கிறது நெல்லையில்? ஆவுடையப்பன் ஆதரவாளர்களிடமும் அறிவாலய வட்டாரத்திலும் விசாரித்தோம்.
“முன்னாள் சபாநாயகரும் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் கட்சியின் சீனியர். இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தனது அம்பா சமுத்திரம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். மேலும் அவர் மீது கட்சி அளவில் நிறைய பேர் தலைமைக்குப் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அப்பாவு சபாநாயகரான பிறகும் கூட ஆவுடையப்பனிடம் நன்றாகவே பழகிக் கொண்டிருந்தார். சபாநாயகர் என்ற முறையில் தனது புரோட்டாகாலை மீறி ஆவுடையப்பனின் அலுவலகத்துக்கு அப்பாவுவே செல்வார். ‘இப்படி எல்லாம் செய்யாதீங்க’ என்று ஆவுடையப்பன் சொன்னாலும், ‘என்ன சிங்கம் சொல்லுதியே… நீங்க வாங்க சிங்கம். நீங்களும் எனக்கு முன்னாடி சபாநாயகரா இருந்தவர்தானே சிங்கம்’ என்று ஆவுடையப்பனை சிங்கம் என்றே சொல்லி தன் காரில் அழைத்துச் செல்வார் அப்பாவு.
தனது காரில் ஆவுடையப்பனை ஏற்றிச் செல்லும் போதும் மரபுகளை உடைத்து காரின் முன் சீட்டில் அப்பாவு அமராமல், ஆவுடையப்பனோடு பின் சீட்டிலேயே அமர்ந்து செல்வார். இந்தக் காட்சிகளை எல்லாம் இந்த ஆட்சியின் ஆரம்ப காலத்தில் நெல்லை பார்த்தது. இவ்வாறு சபாநாயகரே மதிக்கும் அளவுக்கு சீனியராக இருந்த ஆவுடையப்பனுக்கும் அப்பாவுக்குமே கடந்த சில மாதங்களாக கடும் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது.
அரசு விழாக்களில் சபாநாயகர் அப்பாவு முன்னிறுத்தப்பட்டதால் ஆவுடையப்பனுக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இது வெளிப்படையாக வெடித்தது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் நெல்லை வந்த முதல்வர் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்களை சந்தித்துப் பேசினார். பலரும் மனுக்களை முதல்வரிடம் கொடுத்தனர். இந்த சந்திப்புகளுக்குப் பிறகு சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்துப் பேசினார்.
அப்போதில் இருந்தே ஆவுடையப்பனின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஆபத்து வரும் என்று அவருக்கே சில உறுதியான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் ஓரிரு நாட்களுக்கு முன் அறிவாலயத்தில் நடந்த விஷயங்களை ஆவுடையப்பன் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
’நம்மளை மாவட்டச் செயலாளர் பதவியில இருந்து எடுத்துடறதுனு தலைமைக்கு ரிப்போர்ட் போயிருக்கு. நானே இது விசயமா தலைவரை பார்க்க முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். திடீர்னு அறிவாலயத்துல இருந்து போன் பண்ணி உடனே வாங்கனு கூப்பிட்டாங்க. நானும் அறிவாலயத்துக்குப் போனேன்.
அங்க முதன்மைச் செயலாளர் நேரு இருந்தாரு. என்னைப் பாத்ததும், ‘என்னண்ணே நல்லா இருக்கீங்களா… நீங்கள்லாம் சீனியரு… இருந்தாலும் தலைவர் உங்க மாவட்டத்தைப் பத்தி முக்கியமான முடிவெடுத்திருக்காரு. உங்களை மாவட்டச் செயலாளர் பதவியிலேர்ந்து விடுவிச்சுட்டு சட்டத்துறை செயலாளர் பதவியை உங்களுக்குத் தரலாம்னு தலைவர் முடிவு செஞ்சிருக்காரு. இதை நீங்க ஏத்துக்கணும்’னு நேரு சொன்னாரு.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை… நாக்குல்லாம் உலந்து போயிருச்சு. கண்ணுலாம் இருட்டிடுச்சு. மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சு. மயக்கமே வந்துடுச்சு. தட்டுத் தடுமாறி எழுந்திருச்சு பக்கத்துல ஒரு ரூம்ல உக்காந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல, ‘அண்ணே… என்னாண்ணே ஆச்சு… ஏன் டல்லா இருக்கீங்க?’னு குரலைக் கேட்டு கண் முழிச்சிப் பாத்தா ராசா நின்னாப்ல.
அப்பதான் அவர் ரூம்ல நான் உக்காந்திருக்கேன்னு தெரிஞ்சது. என் நிலமைய பாத்துட்டு தண்ணி எடுத்துட்டு வரச் சொன்ன ராசா, கொஞ்சம் முட்டாயும் வாங்கிட்டு வரச் சொல்லி இதை சப்பி சாப்பிடுங்கனு சொன்னாரு. அதுக்குப் பிறகுதான் கொஞ்சம் தெளிஞ்சேன். ராசாகிட்ட, ‘இதுபோல நேரு சொன்னதை சொல்லி இதையெல்லாம் என்னால தாங்க முடியலைனு சொன்னேன். என் நிலைமைய பாத்துட்டு ராசா, ‘ஆமாண்ணே… தலைவர் அப்படிதான் சொல்லியிருக்காரு. நீங்க சீனியரு. எதா இருந்தாலும் தலைவர்கிட்ட பேசுங்க. முதல்ல கொஞ்சம் உடம்பை தேத்திக்கங்க’னு சொன்னாரு.
கொஞ்ச நேரம் அங்கயே உக்காந்திருந்தேன். தலைவர் அவர் ரூமுக்கு வந்துட்டதா சொன்னாங்க. அதுக்கப்புறம் தலைவரை பாக்க போனேன். உள்ள போனதுமே கையெடுத்து கும்பிட்டேன். தலைவர் என்னை பிடிச்சு உக்கார வச்சாரு. ‘வாங்கண்ணே… நீங்கள்லாம் கட்சியில ரொம்ப சீனியரு.
கட்சியில இப்ப நாம நிறைய மாற்றம் பண்ண வேண்டியிருக்கு. அதனால நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுங்க’னு சொன்னாரு. உடனே நான், ‘இல்ல தலைவரே… நான் நல்லாதானே பண்ணிக்கிட்டிருக்கேன்’னு சொன்னேன். ‘இல்ல ரிப்போர்ட் அப்படி எதுவும் சரியா இல்லை’ன்னாரு அவரு.
தலைவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மறுபடியும் மூச்சு வாங்க ஆரம்பிச்சிருச்சு. நான் உடனே, ‘தலைவரே நான் இல்லாட்டாலும் என் பையனுக்காச்சும் கொடுங்க’னு கேட்டேன். ஆனால் தலைவரு, ‘இல்லண்ணே… வேற ஆளைப் போடலாம்னு இருக்கேன். நீங்கதான் பாத்து அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்.
வைகோ கட்சியை விட்டு பிரிஞ்சப்ப திருநெல்வேலி மாவட்ட முழுசும் என்னை அழைச்சுக்கிட்டுப் போய் கொடியெல்லாம் ஏத்த வச்சது நீங்கதான். அதையெல்லாம் நான் மறக்க மாட்டேன். ஆனாலும் இப்ப கட்சியில சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கு. அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன்’னு சொன்னாரு.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. உடனே தலைவர் கைய பிடிச்சுக்கிட்டு ஓ….னு அழ ஆரம்பிச்சுட்டேன். உடனே தலைவர், ‘அண்ணே என்ன பண்றீங்க. அழாதீங்க….’னு சமாதானப்படுத்தினாரு. ஆனாலும் நான் அவர் கைய விடாம அழுதுக்கிட்டே இருந்தேன்.ஒரு கட்டத்துல, ‘அண்ணே… சரி நீங்களே இருந்துக்கங்க’னு சொல்லிட்டாரு. அந்த நேரத்துல நான் தலைவரைப் பாக்குறப்ப கலைஞரை பாக்குற மாதிரியே இருந்துச்சு” என்று தனது நெருக்கமான வட்டாரத்தில் ஸ்டாலினை கலைஞராகவே தான் உணர்ந்த தருணத்தை சொல்லிச் சொல்லி நெகிழ்ந்துகொண்டிருக்கிறார் ஆவுடையப்பன்.
–வேந்தன்
பள்ளிகளில் தீண்டாமை: அமைச்சர் அன்பில் மகேஷ் ரியாக்ஷன்!
எஸ்.பி.வேலுமணி வழக்கு : சிறப்பு அமர்வுக்கு மாற்றம்!