ராகுல் பதவியைப் பறித்த தீர்ப்பு: யார் இந்த நீதிபதி ஹரிஷ் வர்மா?

அரசியல்

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் கிரிமினல் அவதூறு வழக்கில் மார்ச் 23 ஆம் தேதி இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக அவர் மக்களவை உறுப்பினர் (எம்பி) பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 ஆம் தேதி அறிவித்தது. இது இப்போது இந்திய அளவில் பெரும் விவாதமாகவும் போராட்டமாகவும் வெடித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையை பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்தபோது ஜெயலலிதா பேரோடு குன்ஹா பெயரும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வகையில் இப்போது ராகுல் காந்தியின் எம்பி. பதவியை பறிப்பதற்குக் காரணமான இந்த தீர்ப்பை அளித்த சூரத் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா என்கிற பெயரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

யார் இந்த நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா என்று தேடியபோது பல தகவல்கள் கிடைத்தன.
இந்தி பேசும் வட இந்திய மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் ஹரிஷ் வர்மாவின் தந்தை ஹாஷ்முக்பாய் வர்மா குஜராத் மாநிலம் வதோத்ராவில் (பரோடா) வழக்கறிஞராக பணியாற்றினார். வதோத்ராவில் தான் ஹரிஷ் வர்மா பிறந்தார். தந்தை வழக்கறிஞர் என்பதால் ஹரிஷ் வர்மாவும் வழக்கறிஞர் படிப்பையே இயல்பில் விரும்பியிருக்கிறார். ஆனால் தன்னைப் போல வாதாடும் வழக்கறிஞராக இல்லாமல் நீதித்துறை பணியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி நீதிபதியாக வேண்டும் என்று அவர் தந்தை விரும்பியிருக்கிறார்.

வதோத்ராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக் கழகத்தில் ஹரிஷ் வர்மா படித்தார். அங்கே அவர் எல்.எல்.பி. பட்டப் படிப்பு முடித்ததும் ஜுடிசியல் ஆஃபீசர் எனப்படும் நீதித்துறை அலுவலர் பணியில் 2008 ஆம் ஆண்டு சேர்ந்தார். நீதித்துறை அலுவலராக பணியாற்றிய பிறகு படிப்படியாக 2015 ஆம் ஆண்டு சூரத் மாவட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நடுவராக பதவி உயர்வு பெற்றார் ஹரிஷ் வர்மா. தொடர்ந்து பணியாற்றி வந்த அவர் 2022 டிசம்பர் மாதம் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் பதவி உயர்வு பெற்றார். அதன் பின் கடந்த 2023 மார்ச் 10 ஆம் தேதி மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு செய்யப்பட்டார்.

சூரத் வழக்கறிஞர்கள் மத்தியில் மாவட்ட நீதிபதி ஹரிஷ் ஷர்மா பற்றி விசாரித்தபோது அவர் கண்டிப்பான நீதிபதி என்ற பிம்பம் கிடைக்கிறது. 43 வயதான நீதிபதி ஹரிஷ் வர்மா நேர மேலாண்மையில் மிகுந்த கண்டிப்பு காட்டுபவர் என்கிறார்கள். ஹரிஷ் வர்மாவின் நீதிமன்றத்தில் விசாரணை என்றால் வழக்கறிஞர்கள் மிகச் சரியான நேரத்தில் ஆரம்பிக்கும் என்கிறார்கள். நீதிபதி ஹரிஷ் வர்மாவின் நீதிமன்றத்தில் ஏதேனும் வாய்தா பெற விரும்பினாலோ, விலக்கு பெற விரும்பினால் காலை 11 மணிக்குள் அவரிடம் சமர்ப்பித்து விட வேண்டும். இல்லையென்றால் அன்று அந்த விசாரணை நடந்தே தீரும் என்கிறார்கள் சூரத் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள்.

அதுமட்டுமல்ல, தன்னிடம் வரும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழக்கறிஞர்கள் வைத்துக் கொள்ள இயலாத நிலையில் அவர்கள் அவதிப்படுவதை பார்க்கும் ஹரிஷ் வர்மா… மாவட்ட சட்ட உதவி மையத்தை அழைத்து அவர்களுக்கான வழக்கறிஞரை ஏற்பாடு செய்தும் கொடுத்துள்ளார். கண்டிப்பானவராக அறியப்படும் ஹரிஷ் வர்மா கனிவானவராகவும் அறியப்படுகிறார்.

குஜராத் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை விரைந்து விசாரித்து முடித்தார் ஹரிஷ் வர்மா என்று குஜராத் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 43 வயதே ஆன இளம் நீதிபதியான ஹரிஷ்வர்மா இந்தத் தீர்ப்பால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

அவரது போட்டோ இணையத்தில் இல்லாத நிலையில் சூரத், வதோத்ரா பத்திரிகை வட்டாரங்களிலும் வழக்கறிஞர் வட்டாரங்களிலும் விசாரித்த வகையில் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. பாதுகாப்பு கருதி அவரது போட்டோ வெளியிடப்படவில்லை என்கிறார்கள் சில வழக்கறிஞர்கள்.

ஆரா

நாங்கள் பேசுவதே போராட்டம் தான்: கார்த்தி சிதம்பரம்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *