அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இன்று (ஜனவரி 9) காலையில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கார்த்தி சிதம்பரம் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பாஜக எங்களை விட பெட்டராக கிரவுண்ட் கேம் ஆடுகிறார்கள். இன்றைக்கு இருக்கிற பிராபகண்டா மெஷினை வைத்துப் பார்க்கையில் மோடிக்கு கவுன்ட்டராக ஒருவரை நிற்க வைப்பது கடினம். ஆனால் மோடியை பிரச்சினைகளை முன்னிறுத்தி தோற்கடிக்க முடியும்’ என்று கூறியிருந்தார்,
இந்த பேட்டியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டதாக கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் கசிந்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் ஒரு வார கால டெல்லி பயணம் முடிந்த நிலையில் கார்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற தகவல் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தரப்பினரிடம் பேசினோம்.
“கார்த்தி சிதம்பரம் எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து அவ்வாறு எந்த விளக்கம் கேட்புக் கடிதமும் வரவில்லை. ஒருவேளை அப்படியே அனுப்பியிருந்தால் கூட, அவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் எம்பி.யுமான கார்த்திக்கு மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்புக் கடிதம் அனுப்ப அதிகாரம் இல்லை. தேசிய தலைமைதான் அனுப்ப முடியும். ஏற்கனவே நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் மீது தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டது. இதை அப்போதே கார்த்தி சிதம்பரம் கண்டித்தார். தமிழக காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கையை மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்தி வைத்தார்.
இந்த பின்னணியில் கார்த்தி சிதம்பரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முகாந்திரமே இல்லை. ஒரு வாரமாக டெல்லியில் தங்கிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தேர்தல் முடியும் வரை தன்னை மாநில தலைவராக நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் சென்னை திரும்பியதும் சத்தியமூர்த்தி பவனில் இருந்தே இந்த தகவல் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியிடம் பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக கேட்டதற்கு, ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் அப்படி ஏதும் அனுப்பப்பட்டதாக தனக்கு தெரியவில்லை என்று ஆஃப் த ரெக்கார்டாக கூறியிருக்கிறார் ராமசாமி.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் விசாரித்தபோது, “தொடர்ந்து ஊடகங்களில் சுய விமர்சனம் என்ற பெயரில் அளவைத் தாண்டி பேசிக் கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக இந்தியா கூட்டணிக் கூட்டத்திலேயே பேசப்பட்டிருக்கிறது. ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதமே எழுதியிருக்கிறார். ஆனால், கார்த்தி சிதம்பரம் அதுபற்றியும் தனது தனிப்பட்ட கருத்துகளை பொது வெளியில் முன் வைக்கிறார். தலைமைக்கு முரணாக தொடர்ந்து பேசி வரும் கார்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி சிவகங்கையில் காங்கிரஸார் ஆர்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இதையெல்லாம் குறிப்பிட்டு அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் பெற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எம்.பி என்பதால் அகில இந்திய தலைமைதான் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை பற்றி முடிவு செய்யும்” என்கிறார்கள்.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறுபான்மையினர் நலன்… முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!