ஆர்.எஸ்.எஸ் அறிவித்த 50 இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட எந்த ஊர்வலம் மற்றும் போராட்டத்துக்கும் அனுமதியில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்தது. அதற்கு நீதிமன்றம் காவல்துறைக்கு ஒரு வழிகாட்டுதலை தந்தது.
28 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாடு அரசு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கும், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் முன்மொழிந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிப் போராட்டத்துக்கும் தடை விதித்துள்ளது.
சமூக நல்லிணக்கப் போராட்டத்துக்கு ஏராளமான அரசியல் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும், சமூக நீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், இந்தத் தடை ஏமாற்றமளிக்கிறது.
இதை சட்டப்படி அணுகி அனுமதி பெற்று இந்த சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலிப் போராட்டத்தை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையிடம் நாங்கள் மீண்டும் மனு கொடுக்க இருக்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ் நடத்துகிற 50 இடங்களில் நாங்களும் நடத்தினால் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்கிற அச்சம் அரசுக்கு இயல்பாக எழத்தான் செய்யும்.
ஆனால் அந்த 50 இடங்களைத் தவிர்த்து, நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவியப் போராட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதித்து இருப்பது சற்று ஏமாற்றத்தைத் தருகிறது.
385 ஒன்றிய தலைநகரங்கள், நகர முனிசிபாலிட்டி, டவுன் பஞ்சாயத்து தலைநகரங்கள், சென்னைப் போன்ற பெருநகரங்களில் சட்டமன்ற தொகுதிவாரியாகவும் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.
ஏறத்தாழ 500 இடங்களில் அனுமதி கேட்டு இருந்தோம். சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் இணைந்து இந்த போராட்டம் நடத்த முடிவு செய்தோம்.
அதன்பிறகு 25 இயக்கங்களுக்கு மேல் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்த சமூக நல்லிணக்கப் போராட்டம் என்பது சமூக அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரு அடையாளப் போராட்டம் தான்.
எனவே ஆர்.எஸ்.எஸ் அறிவித்த 50 இடங்கள் தவிர்த்து நாங்கள் அறிவித்த மற்ற இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநரிடம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ்க்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. தொடக்கத்தில் அவர்கள் இப்படிதான் பேரணி என்ற பெயரில் அடியெடுத்து வைத்து பின்னர் முஸ்லீம் வெறுப்பு, கிறிஸ்தவர்கள் வெறுப்பு விதைக்கிறார்கள்.
இந்துக்கள் என்ற பெயரால் மத உணர்வை வளர்க்கிறோம் என்று கூறி இந்தியா முழுவதும் கலவரத்தை ஏற்படுத்துவதே அவர்களின் திட்டமாக இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டை குறிவைத்திருக்கிறார்கள்.
மக்களின் அடிப்படை கோரிக்கைகளுக்காக பாஜக பேரணி நடத்தினால், நாம் அதில் தலையிடப் போவதில்லை. பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ம் ஒன்று தான் என்றால் கூட அது அரசியல் இயக்கம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு வகுப்புவாத இயக்கம். அந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாக ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை சொல்லப் போகிறது என்றால் தமிழ்நாடு நாசமாகிவிடும் என்ற கவலை இருக்கிறது.
எனவே அதற்கு அனுமதி தரக்கூடாது என்பது எங்களது வேண்டுகோள். அந்த அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தை அறிவித்தோம் என்றார்.
கலை.ரா
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி!
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?
வெயிட்டா பேசுங்க தலைவரே பணம் இல்லன்னா வராது