’மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்’ என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிரந்தர நடைபாதை, விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே மணற்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைபாதையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்துவைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் இப்பாதையை, மற்றவர்களும் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் இன்று (நவம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில், ”மாற்றுத்திறனாளிகள் கடல் அருகில் சென்று கண்டு மகிழ முடியாமல் தூரத்திலிருந்து ஏக்கத்தோடு பார்த்து செல்லும் காட்சிகளை பலகாலமாக மெரினா கடற்கரையில் நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம்.
அதற்கொரு விடிவை, மாற்றுத்திறனாளிகளும் கடலின் அருகில் வந்து கண் நனைய கடலைப் பார்த்துச்செல்லும் வாய்ப்பை இப்போது பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் அந்தப் பாதையை மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக வருபவர்கள் மட்டுமே பயன்படுத்தவும், மற்றவர்கள் செல்வதை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு சிறந்த நோக்கத்தோடு போடப்பட்ட அந்தப் பாதை பழுதடைந்து விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் அப்பாதை பயன்பாட்டில் இருக்க, அதை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை பொதுமக்களும் உணர்ந்து அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
தமிழகத்தில் அடித்து வெளுக்கப் போகும் கன மழை!
ஆன் லைன் ரம்மி சட்டம்- ஆளுநர் மீது பழி: அண்ணாமலை