ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வெற்றி மாறன் பெரியாரின் பேரன் என்று தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 60-வது மணி விழா, சென்னையில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன், “கலை என்பதே அரசியல். திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவு தான் தமிழகம் இன்னும் ஒரு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது.
சினிமா என்பது வெகுஜன மக்களை எளிமையாக சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். கலையை சரியாக பயன்படுத்த தவறினால் நிறைய அடையாளங்களை நாம் இழக்க நேரிடும். வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக அடையாளப்படுத்துவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். இந்த அடையாளங்களை நாம் காப்பற்ற வேண்டும். நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
வெற்றி மாறன் ராஜ ராஜ சோழன் குறித்து பேசியதற்கு, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில், நடிகர் கருணாஸ், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் வெற்றி மாறனுக்கு ஆதரவாக பேசியிருந்தனர்.
இந்தநிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜ ராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறி மாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்துச் சொல்கின்றனர். போராடவும் செய்கின்றனர்.
இந்நிலையில், 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன்.” என்று பதிவிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தான் தலித் மக்கள் மீதான அதிக ஒடுக்குமுறை நிகழ்ந்தது என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வெற்றி மாறன் ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செல்வம்
சிறப்புக் கட்டுரை: ராஜ ராஜ சோழன் இந்துவா?
சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை.. பிரதமர் மோடி பாராட்டு!