கடலூரில் நாளை (ஜனவரி 28) நடைபெற உள்ள சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு போஸ்டரில் அனுமதியின்றி தன்னுடையை புகைப்படத்தை ஒட்டியுள்ளதாக இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் கடலூரில் ஜனவரி 28, 29 ஆகிய இரு தினங்களில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இரண்டு நாட்களிலும் மகளிர் கருத்தரங்கம், பட்டிமன்றம், காவி பேரணி, கச்சேரி, பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையுலகில் இந்து சனாதன கருத்துகளை புகுத்திய திரைப்பட குழுவினருக்கு விருது அளிக்கப்படும் என்றும், இதனை வழங்குபவர்கள் பட்டியலில் இயக்குநர்கள் கங்கை அமரன், பாக்யராஜ் ஆகியோருடன் எஸ்.பி முத்துராமன் புகைப்படமும் சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது.

இதனை இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜூன் சம்பத் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட நிலையில் அவரது கட்சியினரும், வலதுசாரி ஆதரவாளர்களும் தொடர்ந்து பரப்பிவருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் எஸ்.பி. முத்துராமனிடம் தொடர்பு கொண்ட கேட்டபோது, தனக்கு தெரியாமலே தன் படத்தை போட்டு போஸ்டர் அடித்து ஒட்டியும் பரப்பியும் வருகின்றனர் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் பங்கு கொள்வதாக நான் ஒப்புக்கொள்ளவே இல்லை. இதுகுறித்து யாரும் என்னிடம் நேரில் வந்து அனுமதி கேட்கவில்லை.
போனில் மட்டும் யாரோ ஒருவர் கடலூரில் நடக்க இருக்கும் இது போன்ற நிகழ்ச்சிக்கு வருவீர்களா? என்று கேட்டார். ஆனால் நான் முதுமை காரணமாக வெளியூருக்கு பயணம் செய்வதில்லை என்று சொல்லி மறுத்துவிட்டேன்.
அதையும் மீறி என்னுடைய புகைப்படத்தை அனுமதியின்றி போஸ்டரில் ஒட்டியுள்ளனர்.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தடையை மீறி சென்னை பல்கலை.யில் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட எஸ்எஃப்ஐ
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலோர மாவட்டங்களில் மழை!