இயக்குனர் மோகன் ஜி கைது : தலைவர்கள் ரியாக்சன்!

Published On:

| By christopher

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக கூறிய  இயக்குனர் மோகன் ஜி, திருச்சி மாவட்ட ரூரல் போலீசாரால் இன்று (செப்டம்பர் 24) கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது ஆதரவையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்துகிற கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நான் செவி வழியாக கேள்விப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “இதனை அங்கு பணிபுரியிற ஊழியர்கள், அந்த ஊரை சேர்ந்தவர்கள் இந்த தகவலை என்னிடம் சொன்னார்கள்” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், மோகன் ஜியை சென்னை காசிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருச்சி மாவட்ட ரூரல் போலீசார் இன்று  கைது செய்தனர். தொடர்ந்து திருச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து  மோகன் ஜி கைதுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை!

இதுதொடர்பாக பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

யு-டியூப் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்காணலில்,’’ புகழ்பெற்ற கோயில் ஒன்றில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தான் கூறியிருக்கிறார்.

இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கற்பனைக்கு எட்டாத விதத்தில் பேசியுள்ளார்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், “பாரம்பரியமிக்க பழனி ஆண்டவர் கோயில் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்க வாய்ப்பேயில்லை. கற்பனைக்கு எட்டாத விதத்தில் மோகன் ஜி பேசியுள்ளார். அப்படி கலப்பதற்கு என்ன தேவை இருக்கிறது?” என அவர் தெரிவித்துள்ளார்.

கைது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு விரோதமானது!

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது அறிக்கையில், “திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை கைது செய்ததற்கான காரணம் அவருக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ தெரிவிக்கப் படவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு விரோதமானது. வன்மையாக கண்டிக்கத் தக்கது” என எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரியா பதவியேற்பு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு மழை?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share