“நடிகர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தால் செல்வேன்” என்று இயக்குனர் அமீர் இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமீர்,
“திரைத்துறையாக இருந்தாலும் வாழ்வியலாக இருந்தாலும் கிராமத்தை தவிர்த்துவிட்டு நீங்கள் சினிமாவை பார்க்கவே முடியாது. அசுரன், கர்ணன் என தொடர்ச்சியாக கிராமத்தின் கதைக்களம் கொண்ட சினிமாக்கள் தான் வருகிறது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது. ஆளும்கட்சிக்கு எதிராக அரசியல் செய்யும் போது எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கைத்தான் சுட்டிக்காட்ட முடியும். அதனால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள்” என்றார்.
அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமீர், “எல்லோரும் அரசியலில் தான் இருக்கிறோம். இப்போது இருக்கும் நெருக்கடிக்கு நிச்சயம் அரசியலுக்கு வந்தாலும் வருவேன். அதுதான் எனது உள்ளுணர்வும் சொல்கிறது.
நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு எனது வாழ்த்துக்களை ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் என்னை அரசியலுக்கு அழைத்தால் செல்வேன்
ஆரியத்திற்கு எதிரான சொல் தான் திராவிடம். அது நம் மண் சார்ந்து ரத்தத்திலேயே இருக்கிறது. அதனால் எல்லோரும் திராவிடர்கள் தான். பாசிசத்திற்கு எதிராக யாரெல்லாம் அரசியல் செய்கிறார்களோ, அது திராவிட அரசியல் தான்.
திராவிடம் என்ற பெயர் உள்ள கட்சிகள் செய்தால் மட்டும் தான் அதன் பெயர் திராவிட அரசியல் இல்லை. திராவிடம் என்ற பெயர் இல்லாத கட்சிகளுக்கும் அதுதான் அடையாளம்” என்றார் அமீர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மம்முட்டி விட்டதை பிடித்த மகன்… துல்கர் சல்மான் ‘பான் இந்தியா’ ஸ்டாரான கதை!
செங்கோட்டையனை நோக்கி கேள்வி: அதிமுக தலைமை கழகத்தில் பரபரப்பு!