பழனியில் காலை உணவு திட்ட பெண் சமையலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் இன்று (ஏப்ரல் 11) கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில், காலை உணவு திட்ட சமையலராக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல் காலை உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும் பாஜக மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் தனது வண்டியில் ஏறுமாறு கூறியிருக்கிறார்.
சமையல் பொருட்களை கணக்கு பார்க்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் மகுடீஸ்வரன் மீது, மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வந்தார்.
பாலியல் புகாரை தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பதவியில் இருந்து மகுடீஸ்வரனை நீக்குவதாக மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரனை கர்நாடாவில் வைத்து திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரை தமிழகம் அழைத்து வர உள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கர்ப்பமாக இருக்கிறேனா?… வைரலாகும் நடிகை ஷபானாவின் பதிவு!
“இபிஎஸ் ‘ரோடு ஷோ’ போக தயாரா?” – அண்ணாமலை சவால்!