Sivalingam resign his District Secretary post?
வைஃபை ஆன் செய்ததும் திமுக வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் அறிவிக்கும் வீடியோ காட்சி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சி தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அதன்பிறகு மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
ஒவ்வொரு தொகுதி மற்றும் வேட்பாளர் பெயரை சொல்லி வாசித்தார் ஸ்டாலின். இந்த வகையில் கள்ளக்குறிச்சி என்ற தொகுதியை குறிப்பிட்டு மலையரசன் என வேட்பாளர் பெயரை அறிவித்தார் ஸ்டாலின்.
அப்போது அரங்கத்தில் இருந்த சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றார். அடுத்த சில நிமிடங்களில் அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது.
12 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக ஏற்கனவே அறிவித்தபடி நடத்தப்பட்டது. அந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் சிவலிங்கம் கலந்து கொள்ளவில்லை. ‘சிவலிங்கம்… சிவலிங்கம்… சிவலிங்கம்…‘ என மூன்று முறை ஸ்டாலின் அழைத்தும் அவர் இணைப்பில் இல்லை என ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு விசாரித்த போது தான் கள்ளக்குறிச்சி தொகுதிக்கான வேட்பாளராக முதன்மையாக பரிசீலிக்கப்பட்ட தனது பெயர் திடீரென அகற்றப்பட்டதால் அதிருப்தி அடைந்து சிவலிங்கம் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்து மாவட்ட செயலாளர் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் என்ற தகவல் ஸ்டாலினுக்கு கிடைத்தது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 2019- 24 திமுக எம்.பி.யாக கௌதம சிகாமணி இருந்தார். மீண்டும் அவருக்கு சீட் இல்லை என்ற பேச்சு எழுந்த நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் சிவலிங்கமே வேட்பாளர் என கிட்டத்தட்ட உறுதியாக பேசப்பட்டது.
சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த வகையில் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளராக அவரது பெயர் முதல் இடத்தில் இருந்தது. இதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி கொண்ட சிவலிங்கம், பரப்புரை செய்வதற்கான வாகனம் வரை ஏற்பாடு செய்து விட்டார்.
இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் என ஸ்டாலின் அறிவித்த போது ஏமாற்றம் அடைந்து புறப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் முயற்சி செய்த பிறகு திமுக நிர்வாகிகள் சிவலிங்கத்தை ஃபோனில் பிடித்தனர்.
’எனக்குதான் சீட்டு. ஆனா கடைசி நேரத்துல தட்டிப் பறிச்சிட்டாங்க. அதனால மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை’ என்று மட்டும் அப்போது பதிலளித்திருக்கிறார். உடனடியாக இந்த தகவல் முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சில நிமிடங்களில் சிவலிங்கத்திற்கு ஸ்டாலினே போன் செய்து சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
ஆனால் தனக்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்றால், மாசெ பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சிவலிங்கம் முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் சேலம் திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிவலிங்கத்தோடு போனில் பேசிய ஸ்டாலின்… உடனடியாக கள்ளக்குறிச்சி நிர்வாகிகளை நாளை அதிகாலையே சிவலிங்கம் வீட்டுக்கு போய் அவரை சந்திக்குமாறும், அங்கிருந்து தன்னை அழைக்குமாறும் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து நாளை அதிகாலை சிவலிங்கத்தை கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் சென்று சந்திக்க இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!
தமிழச்சி Vs தமிழிசை: தென்சென்னையில் சூடு பிடிக்கும் களம்!
அட அடெ…. வாங்க அண்ண வீரபாண்டி அண்ணா… சும்மா அள்ளுது