டிஜிட்டல் திண்ணை: பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்… மா.செ.க்கள் மாற்றத்துக்கு முன்னோட்டம்?

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் புதிய பொறுப்பு அமைச்சர்கள் பட்டியல் இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப்  பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“செப்டம்பர் 28 ஆம் தேதி உதயநிதி துணை முதல்வராகும் அறிவிப்பும் அதோடு அமைச்சரவை மாற்ற அறிவிப்பும் வெளிவந்தது.  அதன் அடிப்படையில் இன்று (அக்டோபர் 8) பொறுப்பு அமைச்சர்களின் மாற்றப் பட்டியல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரநிதித்துவம் கிடைத்திட வில்லை. இதனால் அமைச்சரவை பிரதிநித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான அறிவிப்பு  அரசாணையாகவே வெளிவந்தது.

இந்த அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக, செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ளிட்ட   பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.  செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்றபின்னரும் கூட அவர் இலாகா இல்லாத அமைச்சராக சில நாட்கள் இருந்தார். பின் கோவை விவகாரங்களை ஈரோடு மாவட்ட அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைத்தார் முதல்வர்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பின் பொறுப்பு அமைச்சர்களிலும் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திமுக வட்டாரத்தில் நிலவியது.

உதாரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் அமைச்சரவையில் இடம்பெற்றார். அதேபோல தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோவி செழியனும் அமைச்சர் ஆனார். இதையடுத்து சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நேருவும், தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த அன்பில் மகேஷும்  அதே நிலையில் தொடர்வார்களா, வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் ஆக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அக்டோபர் 8 அமைச்சரவை கூட்டம் நடக்கும் தினத்திலேயே பொறுப்பு அமைச்சர்களை மாற்றி அறிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

மொத்தம் 13 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நேரு இனி நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்படுவார். அதேபோல நெல்லை பொறுப்பு அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். குமரியில் மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதால் அந்த மாவட்டத்துக்கு தங்கம் தென்னரசு அனுப்பப்பட்டார்.

கோவைக்கு மீண்டும் செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக்கப்பட்டார்.  நீலகிரி மாவட்டத்துக்கு அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் நீக்கப்பட்ட நிலையில் சாமிநாதன் அம்ம்மாவட்ட பொறுப்பு அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

நெல்லை திமுகவினர் நேரு பொறுப்பு அமைச்சராக்கப்பட்டதை வரவேற்கிறார்கள்.

9 பேர் படமாக இருக்கக்கூடும்

’ஏற்கனவே நெல்லை திமுகவின் உட்கட்சி பஞ்சாயத்துகளை நன்கு அறிந்தவர் கே.என்.நேரு. இதுவரை தங்கம் தென்னரசு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சமயத்தில்தான் நெல்லை மாநகராட்சி பிரச்சினை உச்சத்தை எட்டியது.

மேயர் சரவணன் ராஜினாமா ஏற்கப்பட்டு, அதன் பின் புதிய மேயர் யார் என்பதை தலைமை முடிவு செய்து கவுன்சிலர்களிடம் சொன்ன பிறகும்… திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் போட்டி வேட்பாளராக களமிறங்கினார். அவருக்கும் கணிசமான திமுக கவுன்சிலர்கள் ஓட்டளித்தனர். இதையெல்லாம் தங்கம் தென்னரவின்  மென்மைப் போக்கு  காரணமாக  தடுக்க முடியவில்லை.

தங்கம் தென்னரசு சில நிர்வாகிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க முனைந்தாலும்…அதற்கு சமுதாய முத்திரை குத்தும் முயற்சிகள் நடந்ததால் நீக்கு போக்காகவே  கையாண்டார்  தங்கம் தென்னரசு. இதனால் நெல்லை உட்கட்சிப் பிரச்சினைகளை அவரால் முழுமையாக தீர்க்க முடியவில்லை.  இதேநேரம் நேரு  பொறுப்பு அமைச்சராக இருந்திருந்தால் போட்டி வேட்பாளர் என்ற பேச்சே எழுந்திருக்காது. தாமதமாக வந்தாலும்  நெல்லைக்கு நேருவை பொறுப்பு அமைச்சர் ஆக்கியிருப்பது வரவேற்கத் தக்கது’ என்கிறார்கள் திமுக நெல்லை நிர்வாகிகள்.

அதேபோல  தங்கம் தென்னரசு நெல்லையை விட அதிக குழப்பங்கள் நிறைந்த கன்னியாகுமரிக்கு பொறுப்பு அமைச்சராக்கப்பட்டுள்ளார். அங்கே முன்னாள் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ் என்ற மூன்று கோஷ்டிகள் இருக்கும் நிலையில் தங்கம் தென்னரசுவுக்கு சவால்தான் என்கிறார்கள்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபோது கூட கோவை மாவட்ட கட்சி விவகாரங்களில் அவரிடம் கருத்து கேட்கப்பட்டே  முடிவெடுத்தது திமுக தலைமை. நடந்து முடிந்த எம்பி தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக  கணபதி ராஜ்குமாரை தேர்வு செய்ததே அப்போது சிறையில் இருந்த செந்தில்பாலாஜிதான்.. எனவே செந்தில்பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது என்பது சம்பிரதாய பூர்வ அறிவிப்புதான்.

இப்போது திமுகவில் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு என்னவென்றால்;… பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட மறுசீரமைப்பு, மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது என்பதுதான். அதற்கேற்பதான் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்ற நம்பிக்கையில் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நயினார்… 4 கோடி… சிபிசிஐடி விசாரணை: தண்ணி குடித்த கேசவ விநாயகன்

ஹரியானா பாஜக… காஷ்மீரில் தேமாக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel