வைஃபை ஆன் செய்ததும் விஜய் மக்கள் இயக்கத்தின் விஜய்-மாணவர்கள் சந்திப்பு பற்றிய புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“நடிகர் விஜய் மெல்ல மெல்ல அரசியலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்னொரு அத்தாட்சியாக அமைந்திருக்கிறது வரும் ஜூன் 17ம் ஆம் தேதி அவர் நடத்தும் விழா. விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆங்காங்கே செய்துகொண்டிருக்கும் விஜய்… கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் சிஸ்டமேட்டிக்காக சில சம்பவங்களைத் தொடங்கினார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுதும் இயக்க நிர்வாகிகள் மரியாதை செய்தனர். அம்பேத்கருக்கு விஜய் மரியாதை செய்கிறாரே… அரசியலை நோக்கிய பயணமா என்ற கேள்விகள் எழுந்துகொண்டிருக்கும்போதே… அடுத்தடுத்து ஜூன் 17 ஆம் தேதி தீரன் சின்னமலை பிறந்தநாளை ஒட்டி ஈரோடு மாவட்டம் ஓடாநிலைக்கே சென்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது நெஞ்சில் விஜய் படத்தை சுமந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
அடுத்து ஜூன் 19 ஆம் தேதி மறைந்த பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்தாவது ஆண்டு நினைவுதினம், ஜூன் 5 காயிதே மில்லத் பிறந்தநாள் என தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமைகளை மதித்து மரியாதை செலுத்துவதைத் தொடர்ந்தது விஜய் மக்கள் இயக்கம்.
இதற்கிடையே உலக பட்டினி தினத்தை ஒட்டி ஏழை எளியவர்களுக்கு மதிய உணவு அளித்த விஜய் மக்கள் இயக்கம்… விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் குழந்தைகளுக்கு பால், ரொட்டி, முட்டை ஆகியவற்றை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி மாணவர்களை நோக்கி பெரும் கவனம் திருப்பும் நிகழ்வை அறிவித்திருக்கிறார் விஜய்.
விஜய்யின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு… வரும் ஜூன் 17 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளை பெற்றோர்களுடன் சந்திக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜூன் 7 ஆம் தேதி அறிவித்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரிசல்ட் சமீபத்தில் வெளியானதும் அந்தந்த மாவட்ட செயலாளர்களைத் தொடர்புகொண்ட விஜய் மக்கள் இயக்கம் தலைமை, ‘உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்த மூன்று மாணவிகள் பட்டியலை ரெடி செய்யுங்கள்.
அந்த மாணவர்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள். உங்கள் பிள்ளைக்கு விஜய் பரிசு வழங்கி கௌரவிக்க நினைக்கிறார் என்று சொல்லுங்கள். அவர்களது ஒப்புதலைப் பெற்று மாணவர்களின் ஆதார் அட்டை வங்கி கணக்கு எண், முழு முகவரி, தொடர்பு எண் போன்ற விபரங்களை அனுப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டனர்.
அதேபோல விஜய் மக்கள் இயக்க மாசெக்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று விவரம் சொல்ல… மாணவர்களும் மகிழ்ச்சியில் துள்ள பெற்றோர்களும் ஆர்வமாக கேட்ட விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு 234 சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1404 மாணவர்களின் விவரங்களைத் திரட்டி தலைமைக்கு அனுப்பி வைத்துவிட்டனர் விஜய் மக்கள் நிர்வாகிகள். அதுமட்டுமல்ல… மாணவர்களை மட்டுமே அழைத்தால் என்னதான் நாம் வசதி செய்துகொடுத்தாலும் அவர்களை தனியாக அனுப்பி வைக்க பெற்றோர்களுக்கு மனமிருக்காது.
அதனாலும் மாணவர்களோடு பெற்றோரையும் சந்திக்க வேண்டும் என்பதாலும் மொத்தம் 1404 மாணவர்களோடு அவர்களின் தாய், தந்தை என பெற்றோர்களையும் அழைத்து வர திட்டமிட்டுள்ளார் விஜய். ஆக ஜூன் 17 ஆம் தேதி விஜய் கலந்துகொள்ள உள்ள அந்த நிகழ்ச்சியில் 1404 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் 2808 பேர் என மொத்தம் 4212 பேர்களை சந்திக்கிறார் விஜய். மாணவர்களின் பெற்றோர்கள் பலர் திமுக, அதிமுக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இந்த விழாவுக்கு செல்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்களாம்.
அனைவரையும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள வாகனங்களில் அழைத்து சென்று திரும்ப அழைத்து வர இருக்கிறார்கள். இந்த வருடம் மட்டுமல்ல இந்த வருடம் தொடங்கி இனி ஒவ்வொரு வருடமும் இதுபோல மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாக்கள் தொடரும் என்கிறார்கள் மக்கள் இயக்க வட்டாரத்தில்.
ஏற்கனவே விஜய் தனது அரசியல் பயணத் திட்டத்தைத் தெளிவாக வகுத்து வைத்துக் கொண்டு அதன்படியே இப்போது நகர்ந்துகொண்டிருக்கிறார். அதாவது உதயநிதி திமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும்போதுதான் தனது அரசியல் தீவிரமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் விஜய்.
2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என்ற நோக்கம் இருந்தாலும் 2031 தான் விஜய்யின் இலக்கு. அதற்காகத்தான் இன்றைய மாணவர்களான நாளைய வாக்காளர்கள் மூலம் மாண்புமிகுவாக திட்டம்போடுகிறார் “மாண்புமிகு மாணவர் விஜய்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
“ஆர்.என்.ரவி ஆளுநரா அரசியல்வாதியா?” – பி.சி.ஸ்ரீராம் காட்டம்!