டிஜிட்டல் திண்ணை: 10 மணி நேர ED  விசாரணை… கதிர் ஆனந்த் சென்றதில் இருந்து வந்தது வரை! நிம்மதிப் பெருமூச்சு விட்ட துரைமுருகன்

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வெளியே வந்த காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“கடந்த ஜனவரி 3, 4 தேதிகளில் அமலாக்கத் துறையினர் வேலூர் காட்பாடியில் இருக்கும் துரைமுருகன், கதிர் ஆனந்த் ஆகியோர் வீட்டிலும், அவர்கள் குடும்பத்தினர் நடத்தும் கிங்ஸ்டன் கல்லூரி வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் ரெய்டு நடத்தினர்.

இந்த ரெய்டின் முடிவில் கிங்ஸ்டன் கல்லூரி வளாகத்தில் இருந்து 2 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாக அப்போதே செய்தி வந்தது.

ரெய்டு நடந்து கொண்டிருந்த நிலையில் துபாயில் இருந்தார் கதிர் ஆனந்த். இதற்கு முன் ஏழு முறை சம்மன் அனுப்பியும் கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகாமல் பதில்களை மட்டுமே அனுப்பியதால்… ஜனவரி 22 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பிவிட்டு சென்றது.

அதே நேரம் ஜனவரி  4 ஆம் தேதி இரவு திடீரென டெல்லி புறப்பட்டு சென்று அங்கே சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு, ஜனவரி 5ஆம் தேதியே சென்னை திரும்பினார் அமைச்சர் துரைமுருகன்.

அமலாக்க துறையின் சம்மனை ரத்து செய்யுமாறு ஜனவரி 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தை நாடினார் கதிர் ஆனந்த். ஆனால் உங்கள் மாநில உயர்நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டதால், கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை  விசாரணைக்கு செல்ல வேண்டிய கட்டாயங்கள் அதிகரித்தன.

ஜனவரி 21ஆம் தேதி மாலை தொடங்கி இரவு வரை துரைமுருகன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் அரசியல் நண்பர்கள் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனையில், ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவது இப்போதைக்கு நல்லது’ என்ற வழக்கறிஞர்கள் அறிவுறுத்தினார்கள்.

அதேநேரம் கதிர் ஆனந்த் தரப்பிலோ, ‘ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வரச் சொல்லிவிட்டு ஜனவரி 21ஆம் தேதி 14 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக ஒரு தகவலை அமலாக்கத்துறை கசிய விட்டது. 2019-ல் கைப்பற்றிய 11 கோடி ரூபாயையும் இப்போது கைப்பற்றிய இரண்டு கோடி ரூபாயையும் சேர்த்து ஏதோ இப்போதுதான் கைப்பற்றியதை போல ஒரு தோற்றத்தை அமலாக்கத்துறை ஏற்படுத்த முனைகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு சென்றால், கைது நடவடிக்கை வரை செல்ல வாய்ப்பு இருக்குமா?’ என்ற சந்தேகத்தை கிளப்பினார்கள்.

கதிர் ஆனந்தின் நலம் விரும்பிகள் அவரிடம், ‘அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சண்டை போடுவது போல பேசாதீர்கள். அவர்களை இரிடேட் ஆக்காதீர்கள். 2019 மக்களவைத் தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் இப்போது நடந்த ரெய்டு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். மற்ற கேள்விகள் கேட்டால் அவகாசம் வேண்டும் என்று தவிர்த்து விடுங்கள்’ என ஆலோசனை சொல்லியனுப்பினார்கள்.

இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் இருந்து துரைமுருகனிடம் போனில் பேசியிருக்கிறார். அப்போது கதிர் ஆனந்தை தைரியமாக விசாரணைக்கு சென்று வர சொல்லுங்கள் என கூறியிருக்கிறார்.

இந்த பின்னணியில் தான் இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் கதிர் ஆனந்த்.

அவர் எம்பி. என்பதால் உரிய மரியாதையுடனே நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். விசாரணையில் அமர்ந்தவுடனேயே, ‘சார்… நாங்கள் உங்களுக்கு ஏழு முறை சம்மன் அனுப்பினோம்.  ஆனால் நீங்கள் விசாரணைக்கே வரவில்லை. அதனால்தான் நாங்கள் ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம். ரெய்டின்போது உங்க ஸ்டாஃப் நல்லபடியா நடத்தினாங்க’ என்றும் சொல்லியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

பத்தே முக்கால் மணிவாக்கில் அவரிடம் விசாரணை சுமுகமாகவே தொடங்கியது. 2019 மக்களவைத் தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான கேள்விகளை தான் முதலில் கேட்க ஆரம்பித்தார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

’அந்த பணம் என்னுடையது இல்லை… எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பூஞ்சோலை சீனிவாசனுடையதுதான்’ என்று கூறியிருக்கிறார் கதிர் ஆனந்த். இதையெல்லாம் டைப் செய்துகொண்டனர் அதிகாரிகள்.

விசாரணையின்  போது கதிர் ஆனந்த்தும் சில கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்.

‘ஏங்க… நேத்து என்கிட்டேர்ந்து 14  கோடி ரூபாய் கைப்பத்தினதா பிரஸ் ரிலீஸ் கொடுத்திருக்கீங்களே?’ என்று கேட்டுள்ளார் கதிர் ஆனந்த்.’

அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சார்… நாங்க அதுபோல எந்த பிரஸ் ரிலீஸும் கொடுக்கவில்லை. எல்லாம் எங்கள் பெயரைச் சொல்லி மீடியாக்கள் பண்ணுகிற வேலை. நீங்க வேணும்னா அப்படி செய்தி வெளியிட்ட மீடியாக்கள் மீது டிஃபமேஷன் கேஸ் கூட போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்ல, இதைக் கேட்டு சிரித்திருக்கிறார் கதிர் ஆனந்த்.

அதன் பிறகு, ‘உங்க கல்லூரியிலேர்ந்து 2 கோடியே சம்திங் இப்ப கைப்பத்தியிருக்கோம். ஏன் அவ்வளவு ரொக்கத்தை வச்சிருக்கீங்க?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு கதிர் ஆனந்த், ‘இல்லல்ல…  எங்க கல்லூரியில படிக்கிற பெரும்பாலான மாணவர்கள் விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள். அவங்க ரொக்கமாகத்தான் பணம் கட்டுவாங்க. அதனாலதான் அதை வச்சிருந்தோம். பேங்க்ல கட்றதுக்காகத்தான் அதை வச்சிருந்தோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சரி… நாங்க இந்த வழக்கை வரும் பிப்ரவரி 28 க்குள் முடிக்க வேண்டும். அதனால நீங்க மீண்டும் விசாரணைக்கு எப்போது வர முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

கதிர் ஆனந்த், ‘வரும் ஜனவரி 31 லேர்ந்து  பார்லிமென்ட் ஆரம்பிக்குது. பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் வரை நடக்குது. அதனால நான் கண்டிப்பாக பார்லிமென்ட் போகணும்’ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள், ‘சரி… அப்படின்னா ஒண்ணு பண்ணுங்க. நாங்க பிப்ரவரி 28க்குள்ள கேசை முடிக்கணும். வர்ற ஜனவரி 27 ஆம் தேதியன்னிக்கு உங்க ஆடிட்டரை நாங்க கேட்குற பேப்பர்ஸோட வர சொல்லுங்க.  ஜனவரி 28 ஆம் தேதி நீங்களும் வந்துட்டுப் போங்க’ என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு கதிர் ஆனந்தும் சம்மதித்திருக்கிறார்.

மாலையே விசாரணை முடிந்தாலும்…  பேப்பர்களை டைப் செய்வது, அதில் கையெழுத்திடுவது போன்றவற்றுக்கே எட்டு மணி ஆகிவிட்டது.

அதன் பிறகே ரிலாக்ஸாக கதிர் ஆனந்த் வெளியே வந்திருக்கிறார். வெளியே வந்த கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம், ‘2019 மக்களவைத் தேர்தல் பற்றி கேள்விகள் கேட்டார்கள். உரிய பதில்களை தெளிவாக சொல்லி இருக்கிறேன்’ என்றார். மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்களா என்ற கேள்விக்கு, ‘அவர்கள் சொல்கிறேன் என சொல்லி இருக்கிறார்கள்’ என பதில் அளித்துவிட்டு புறப்பட்டார் கதிர் ஆனந்த்.

இரவு விசாரணை முடிந்து வீட்டுக்குச் சென்றதும் துரைமுருகனிடம் விசாரணை பற்றி விளக்கியிருக்கிறார் கதிர் ஆனந்த். கூட இருந்த எம்.பி. ஜெகத்ரட்சகனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். துரைமுருகன் இதுகுறித்து முதல்வரிடமும் சொல்லிடுவோம் என்று மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share