வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை -முன்னாள் ஆளுநரும் முன்னாள் மாநில பாஜக தலைவருமான டாக்டர் தமிழிசை இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்த புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அதிமுக -பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்க முடியும் என்றும் கணிசமான இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்க முடியும் என்ற ஒரு விவாதம் அரசியல் அரங்கில் எழுந்தது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பாஜக- அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் 31 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும் என்று கூறியிருந்தார். இது குறித்து முன்னாள் ஆளுநரும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவருமான தமிழிசை கருத்து தெரிவிக்கும் போது, அதை வரவேற்று அதுதான் எதார்த்தமான அரசியல் என்றும் குறிப்பிட்டார்.
’பாஜக- அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று இருக்க முடியாது. இது ஒரு வியூகம். இதை மாநில தலைவர் மேற்கொள்ளவில்லை’ என்றும் தெரிவித்து இருந்தார்.
அதற்கு பிறகு தமிழக பாஜகவில் சமூக விரோதிகள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்றும் தனது கவலையை ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார்.
மேலும் தனது தென் சென்னைக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் என்ற ஒரு அலுவலகத்தையும் திறந்து வைத்தார் தமிழிசை.
இது பற்றியெல்லாம் அண்ணாமலை தரப்பில் டெல்லியில் புகார் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் மாநில தலைமை அலுவலகமும் மாவட்ட அலுவலகங்களும் இருக்கும்போது தமிழிசை தனக்காக ஒரு தனி அலுவலகத்தை திறந்திருக்கிறார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில்… தமிழிசை மீது எப்போதுமே நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கும் அமித்ஷா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் சற்று கோபமாகவே தமிழிசையிடம் சில கருத்துக்களை எடுத்துரைத்தார். எதேச்சையாக அது வீடியோ எடுக்கப்பட்டு லைவ்வில் பரவி விட்டது. இதற்கும் தமிழ்நாடு அரசியல் சூழலுக்கு முடிச்சிட்டது எதிர்க்கட்சிகளை விட அண்ணாமலை ஆதரவாளர்கள்தான்.
அண்ணாமலையை பகைத்துக் கொண்டால் இதுதான் கதி என்று தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக தளங்களில் பதிவிட்டார்கள். தமிழில் மட்டுமல்ல ஹிந்தி மொழியிலும் இதே போன்ற பதிவுகளை அவர்கள் வெளியிட்டார்கள்.
அமித்ஷா ஒரு முன்னாள் மாநிலத் தலைவரை ஒரு முன்னாள் ஆளுநரை ஒரு டாக்டரை ஒரு பெண்ணை இப்படி பொதுவெளியில் நடத்தலாமா என்று பாஜகவின் எதிர்க்கட்சிகள் இதை பெரிய அளவில் விவாதம் ஆக்கினர்.
இந்த நிலையில்தான், ‘ஏற்கனவே தமிழ்நாடு பாஜக பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டதாக ஒரு கருத்துருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. அமித் ஷா தமிழிசையை எச்சரித்த வீடியோவை அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக தளங்களில் பரப்பும் விஷயங்களும் சாதகமாகி வருகின்றன. மேலும் நாடார் சமுதாயம்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே முதுகெலும்பாக இருக்கும் சமுதாயம், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தமிழிசை விக்டிம் ஆக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்து உருவாகியிருக்கிறது’ என்று உளவுத்துறை ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றது.
இதனிடையில் தமிழிசையும் தனது தரப்பு விளக்கங்களை டெல்லிக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், ‘நீங்கள் தமிழிசையின் வீட்டுக்கு சென்று அவரை சந்தியுங்கள்’ என்று டெல்லியில் இருந்து அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜூன் 14 பிற்பகல் தமிழிசையின் வீட்டுக்கு சென்றார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவரை வரவேற்று லெமன் டீ அளித்தார் தமிழிசை. அதோடு, ‘வாய்ஸ் ஆஃப் ஆல்’ என்ற புத்தகத்தையும் அண்ணாமலைக்கு அளித்தார். தான் கொண்டு சென்றிருந்த ஸ்வீட் பாக்ஸை தமிழிசைக்கு அளித்தார் அண்ணாமலை.
அப்போது, ‘அக்கா நான் உங்களைப் பற்றி டெல்லியில் எதுவும் புகார் சொல்லவில்லை. ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் வருவதைப் பார்த்து சில விஷயங்களை அவர்கள் அப்சர்வேஷன் செய்திருக்கலாம். நான் ஏதும் உங்களைப் பற்றி தவறாக டெல்லியில் சொல்லவில்லை’ என்று தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.
தமிழிசையும் நான் கொடுத்த பேட்டிகளும் கட்சிக்காக தானே தவிர உங்களை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. உங்கள் தலைமையில் கட்சி வீரியமாக இருக்கிறது’ என்று பாராட்டி இருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு பிறகு இருவருக்கும் இடையிலான மோதல் போக்கு தணிந்துவிட்டது. மேலும் அண்ணாமலையோடு தமிழக பாஜக நிர்வாகிகளில் எவருக்கேனும் மோதல் ஏற்பட்டால் அது தொடர்கதையாகவே இருக்கும். ஆனால் தமிழிசை விஷயத்தில் அதை மேலிடம் தலையிட்டு முடித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொதுத்துறை செயலாளர் உத்தரவை திரும்ப பெறுக: தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தல்!