டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் எக்சிட் போல்… யாருக்கு எவ்வளவு ஓட்டு??
வைஃபை ஆன் செய்ததும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்வையிட்டு விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று ஜூலை 10ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. மாலை ஆறு மணி வாக்கில் வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டது.
2 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 82.48 சதவீத வாக்குகள் அதாவது ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன, கடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கு கிட்டத்தட்ட சரிசமமாக இப்போது வாக்குகள் பதிவாகியுள்ளன.
திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் முக்கியமான போட்டியாளர்களாக மோதிய விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் வாக்குப் பதிவுக்குப் பிறகு எந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி இருக்கின்றன என்ற விவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன.
முன்னதாக விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அமைச்சர்களும் பொறுப்பு அமைச்சர்களும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை நேற்று ஜூலை 9ஆம் தேதி சந்தித்தார்கள்.
அப்போது பதிவாகும் வாக்குகளில் 70% வாக்குகள் திமுகவுக்கே வந்துவிடும் என்று அவர்கள் உறுதியாக ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்கள். ’பாமக சாதி ரீதியாக மக்களை தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்தது, ஆன போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் சாதி காரணியை விட நம்முடைய அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை போன்றவை முக்கிய காரணியாக இருக்கும்’ என்று அமைச்சர்கள் ஸ்டாலினிடம் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக, பாமக ஆகிய கட்சிகள் தங்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்று தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளிடமும் பூத் ஏஜென்ட்டுகளிடமும் இதுகுறித்த கணக்குகளை கேட்டு பெற்றிருக்கிறார்கள்.
மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணியாற்றிய பத்திரிகையாளர்களும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மதிப்பீடுகளில் இருந்து கணக்கிட்டுப் பார்க்கையில்…
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 90 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வரை பெறும் என்றும்… பாட்டாளி மக்கள் கட்சி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வாக்குகளை பெறும் என்றும் நாம் தமிழர் கட்சி 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வாக்குகள் வரை பெறும் என்றும் நோட்டா அதிகபட்சம் 8,000 வாக்குகள் வரை பெறக்கூடும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் அதிமுக வாக்குகள் யாருக்கு சென்றிருக்கின்றன என்பது பற்றிய தனியான ஆய்வும் நடந்திருக்கிறது. இந்த வகையில் பார்த்தால் அதிமுகவில் இருக்கிற வன்னியர் சமுதாய வாக்காளர்கள் 60% பேர் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 40 சதவீதம் பேர் திமுகவுக்கும் வாக்களித்துள்ளார்கள் என்றும்… அதேபோல அதிமுக வாக்காளர்களாக இருக்கும் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 90% திமுகவுக்கும் 10 சதவீதம் பாமகவுக்கும் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும் விக்கிரவாண்டி களக் கணக்கீடுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது.
இந்த கணக்கீடுகள் இப்படி சொன்னாலும் ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்றுதான் எந்த கட்சிக்கு எத்தனை ஓட்டுகள் என்ற இறுதி நிலவரம் தெரியவரும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்பானி திருமணத்திற்கு வந்த முகமூடி நபர்கள் யார்? வைரல் வீடியோ!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு