வைஃபை ஆன் செய்ததும் கோவையில் ஜூன் 13 ஆம் தேதி இரவு கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரஸ் மீட் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக தனது வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தது. தேர்தல் பணிக்குழுக்களும் அமைக்கப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி… இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக இப்படி தேர்தல் பணிகளில் இறங்கிவிட்ட நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாமக-பாஜக கூட்டணி ஆகியவற்றின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது. ஜூன் 13 ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.
அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, ‘எம்பி தேர்தலிலேயே பாஜகவோடு கூட்டணி வேண்டாம் என சொன்னேன். ஆனால் கடைசியில் கூட்டணி வைத்தோம். பத்து தொகுதிகள் போட்டியிட்டும் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் அவசரப்பட வேண்டாம். இந்த மக்களவைத் தேர்தலிலேயே விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நாம் 32 ஆயிரம் வாக்குகள்தான் வாங்கியிருக்கிறோம்.
ஏற்கனவே இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதைதான் நாம் பாமகவின் கொள்கை முடிவாக வைத்துள்ளோம். ஆளுங்கட்சி பண பலத்தோடும் முழு அரசு இயந்திரத்தோடும் இறங்கும். அதில் நாம் போட்டியிடுவது தேவையா என்பதை யோசிக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்’ என்றார்.
அப்போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, ‘நாம் இப்போதைய சூழலில் விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நமது தொண்டர்களை உற்சாகமாக வைத்திருக்க முடியும்’ என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்டது மாதிரியே டாக்டர் ராமதாஸுக்கும் டாக்டர் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, ‘கூட்டணிக் கட்சிகளிடையே பேசி முடிவெடுப்போம்’ என்று சொன்ன டாக்டர் அன்புமணி வெளியே வந்து செய்தியாளர்களிடமும் அதையேதான் சொன்னார்.
ஜூன் 12 ஆம் தேதி பகலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மையக் குழு கூட்டத்தை வீடியோ கான்பிரன்ஸிலேயே நடத்தி, ‘விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நமது கூட்டணிக் கட்சியான பாமக போட்டியிடட்டும்’ என்று சொல்லியிருந்தார். அதை அவர் அன்புமணியிடமும் தெரிவித்திருந்தார். இந்த அடிப்படையில்தான் தைலாபுரம் நிர்வாகக் குழுவில் பாமக போட்டியிட வேண்டும் என்று அன்புமணி வற்புறுத்தியிருக்கிறார் என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவதை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களோடு சேர்ந்து அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார் அன்புமணி என்கிறார்கள் பாமக தரப்பில்.
இதற்கிடையே ஜூன் 13 இரவு கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘விரைவில் அறிவிப்போம்’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதிமுக தரப்பிலும் பல்வேறு ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ’கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரியளவு தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது என்ற விமர்சனங்கள் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்துள்ளன.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தனது அதிகார பலத்தையும் பண பலத்தையும் பயன்படுத்தி வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில் மீண்டும் விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டே ஏன் போட்டியிட வேண்டும் என்ற கேள்வி அதிமுக புள்ளிகள் சிலரால் எடப்பாடியிடம் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். 2009இல் திமுக ஆட்சியில் இருக்கும் போது இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது கொடநாடு எஸ்டேட்டில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுகவின் செயற்குழு கூட்டத்தை 2009 ஜூலை 20 ஆம் தேதி கூட்டினார்.
அந்த கூட்டத்தில், ‘ திமுக மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிற இந்த சூழ்நிலையில் திமுக என்ன செய்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிற சூழ்நிலையில்… தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களை அதிமுக புறக்கணிக்கிறது என்று இந்த செயற்குழு தீர்மானிக்கிறது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
அப்போது தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் மாநிலத்தில் திமுகவும் மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசும் இருந்தன. இப்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. மாநிலத்தில் திமுகவும், மத்தியில் நமது கூட்டணியில் இல்லாத பாஜகவும் ஆட்சியில் இருக்கின்றன.,
எனவே இந்த சூழ்நிலையில் தேர்தலை எதிர்கொண்டால் மீண்டும் ஒரு தோல்வியைத் தான் எதிர் நோக்க வேண்டும். இது அதிமுகவுக்குள் மேலும் பல சிக்கல்களை உண்டாக்கும். பாஜகவோடு கூட்டணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி அங்கே போட்டியிட்டு ஒருவேளை அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டால் மேலும் விமர்சனங்கள் அதிகரிக்கும்.
இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு ஜெயலலிதா எடுத்த முடிவை முன் உதாரணமாக கொண்டு தேர்தலை புறக்கணிக்கலாம் என்று ஒரு தரப்பினர் எடப்பாடியிடம் யோசனை தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தேர்தலை புறக்கணித்தால் அதிமுக பயந்துவிட்டது என்ற ஒரு கெட்ட பெயர் வரும். எனவே தைரியமாக தேர்தலை எதிர்கொள்வோம் என்று அதிமுக தலைமையிடம் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆலோசனையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் ஜூன் 13 ஆம் தேதி இரவு கோவை விமான நிலையத்தில் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பற்றிய கேள்விக்கு விரைவில் அறிவிப்போம் என்று பதில் சொல்லியிருக்கிறார். பாமக முடிவுக்காக எடப்பாடி காத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் அதிமுக தரப்பில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வச்சான் பாரு ஆங்கிள்– அப்டேட் குமாரு
தமிழிசை – அண்ணாமலை… ஒன்றாக போஸ் கொடுக்க உத்தரவு!