வைஃபை ஆன் செய்ததும் லொக்கேஷன் விக்கிரவாண்டி காட்டியது. வாட்ஸ் அப் அங்கிருந்து மெசேஜ் அனுப்பியது.
“விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (ஜூலை 8) ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து தொகுதியை விட்டு வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த வெளியூர் நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்த இடைத் தேர்தல் பணிகள் இன்றோடு நிறைவடைந்துள்ளன.
இன்று (ஜூலை 8) இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, ‘திமுக இந்தத் தேர்தலுக்காக 150 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவின் டோட்டல் பட்ஜெட் என்ன என்று விசாரித்தபோது மலைக்க வைக்கும் கணக்கு விவரங்கள் கிடைத்தன.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என வாக்காளர் பட்டியல் சொல்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, இவர்களில் இறந்துபோனவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
ஆனால், இது இப்போதைக்கு சாத்தியமில்லை, ஆனால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்கள் யார் யார் என்ற விவரம் தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று பதில் கூறினார் அதிகாரி. இந்த வகையில் சுமார் பதினைந்தாயிரம் ஓட்டுகளை நீக்க வேண்டும் என்று பாமக கோரியது.
இறந்துபோனவர்கள், வெளியூருக்கு மாற்றலானவர்கள், திருமணமாகிச் சென்ற பெண்கள் என்ற கணக்கெல்லாம் போட்டால் கூட மொத்த வாக்காளர்கள் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் என்று வைத்துக் கொள்ளலாம். இவற்றில் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் பேருக்கு வாக்குக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் திமுக சார்பில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் வாக்குக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஜூலை 8 ஆம் தேதியன்று அடுத்த ரவுண்டாக மேலும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 லட்சம் வாக்காளர்கள் என்று வைத்துக் கொண்டால் கூட தலா 2 ஆயிரம் ரூபாய் என்றால் சுமார் 40 கோடி ரூபாய் பணம் இதற்காக செலவிடப்பட்டிருக்கிறது.
இதைத் தவிர கடந்த ஜூன் 25 ஆம் தேதியில் இருந்து ஜூலை 8 ஆம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து திமுகவுக்கு வாக்கு சேகரிக்க அந்த பகுதி மக்களை திமுகவினர் ஈடுபடுத்தி வந்திருக்கிறார்கள். ஒரு வாக்குச் சாவடிக்கு ஆயிரம் ஓட்டுகள் இருக்கிறது என்றால் அதில் 30% ஆன சுமார் 300 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு நாளும் தலா 200 ரூபாய் வழங்கப்பட்டது. தொகுதி முழுக்க இந்த மதிப்பு 200 ரூபாய், 300 ரூபாய் என்று வேறுபட்டது. ஆனால், பொதுவாக ஒரு நாளைக்கு 200 ரூபாய் என்று கணக்கிட்டால் ஜூன் 25 ஆம் தேதியில் இருந்து ஜூலை 8 ஆம் தேதி வரை சுமார் இரண்டு வாரங்களுக்கும் மொத்தம் 2800 ரூபாய் வருகிறது. மொத்த வாக்காளர்களில் 30% பேருக்கு இந்த பணம் சென்று சேர்ந்திருக்கிறது. இதை தோராயமாக கணக்கிட்டால் சுமார் 15 முதல் 16 கோடி ரூபாய் வரை வருகிறது.
மேலும், திமுகவின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கு தினந்தோறும் என கணக்கிட்டு குறிப்பிட்ட தொகை கட்சியின் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பொறுப்பாளர்களால் வேட்டி, சட்டை, சேலை, ரவிக்கை பிட் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வாக்காளர்கள், ‘மழைக் காலம் வருது…அதனால போர்வையும் கொடுத்தால் என்ன?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்காக திருப்பூரில் இருந்து பல்க்காக போர்வை ஆர்டர் கொடுத்து விநியோகித்திருக்கிறார்கள். இதுபோல சில இடங்களில் பிரத்யேகமாக செய்த செலவுகளும் உண்டு.
இடைத் தேர்தலில் திமுக சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கான தினந்தோறும் தங்கிய, உணவு செலவு, இதர செலவுகள், லோக்கல் நிர்வாகிகளுக்கான செலவுகள், சுற்று வட்டாரங்களான விழுப்புரம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தங்கிய செலவுகள், தொகுதிக்குள் கடந்த இரு வாரங்களாக இடைவிடாமல் நடந்த போக்குவரத்துக்கான எரிபொருள் செலவு என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கணக்கிட்டால் திமுகவின் இடைத் தேர்தல் பட்ஜெட் நூறு கோடியைத் தொட்டுவிடும் என்று திமுகவுக்காக தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளே பட்டியலிடுகிறார்கள்.
பாமகவோ தங்களுக்கு சாதகமான பகுதிகள் என்று கருதும் பகுதிகளில் மட்டும் வாக்குக்கு 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை வாக்குக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள்.
இதையறிந்துதான் ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கொடுத்த திமுக மீண்டும் இரண்டாவது தவணையாக ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்கள்.
ஆக விக்கிரவாண்டி இடைத் தேர்தல் மூலம் இந்த சிறு தொகுதிக்குள் கோடிக்கணக்கான ரூபாய் அதிகாரபூர்வமற்ற வகையில் கொட்டி இறைக்கப்பட்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மனுசனால நீ”… ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான வணங்கான் டிரைலர்!
100 ரூபாய்க்கு டீன்ஸ் பட டிக்கெட்… பார்த்திபன் கொடுத்த பரிசு!