டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! முந்தும் திமுக… அன்புமணிக்கு அண்ணாமலையின் மெசேஜ்!

அரசியல் விக்கிரவாண்டி இடைத் தேர்தல்

வைஃபை ஆன் செய்ததும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல்  பரபரப்பு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 12) தொண்டர்களுக்கு எழுதிய மடலில்,  “கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். அதில் தொடர் வெற்றியை உறுதி செய்தாக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இருவரிடமும் முதல்வர், ‘நீங்க ரெண்டு பேரும் வெவ்வேறு கோஷ்டினு பேச்சா இருக்கு. அதையெல்லாம் தகர்த்து ஒற்றுமையா செயல்பட்டு வெற்றி பெறணும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

Aniyur Siva met and greeted the CM M.K.Stalin

இதையடுத்து முதல்வரை சந்தித்துவிட்டு சென்னையில் இருந்து வேட்பாளர் அன்னியூர் சிவாவையும் தனது காரிலேயே அழைத்துக் கொண்டு ஒரே காரில் வேட்பாளரும் மாவட்டப் பொறுப்பாளரும் விழுப்புரம் புறப்பட்டனர். அங்கே இருவருக்கும் உற்சாகமான வரவேற்பும் அளிக்கப்பட்டது. வேட்பாளர் அறிவித்த கையோடு இன்று தேர்தல் பணிக்குழுவும் அறிவித்துவிட்டார் ஸ்டாலின். அதனால் திமுக தேர்தல் பணிகளை துவங்கி விட்டது.

அதிமுக கணக்கு என்ன? 

மக்களவைத் தேர்தல் தோல்வியின் மூலம் அதிமுகவின் இமேஜ் பின்னடைவை சந்தித்திருப்பதால் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அந்த இமேஜை கொஞ்சம் மீட்கலாம் என்று அதிமுக கணக்கு போட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இதை தனது அரசியல் இமேஜை உயர்த்திக் கொள்ளும் சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் விசிக வேட்பாளர் 72 ஆயிரத்து 188 வாக்குகள் பெற்றார். நமது அதிமுக வேட்பாளர்  6 ஆயிரத்து 823 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று 65 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்றார். பாமக இங்கே 32 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது.

இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என்பதுதான் அக்கட்சியின் கொள்கை. ஒருவேளை பாமக போட்டியிடாமல் பாஜக போட்டியிட்டால் நமக்கு இன்னும் எளிதாக இருக்கும்.  இடைத் தேர்தலை முழுக்க முழுக்க என்னிடம் கொடுத்துவிடுங்கள். எல்லா மாவட்டங்களில் இருந்தும் முன்னாள் அமைச்சர்கள் வரவேண்டாம். நானே பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக ஜெயித்துவிடலாம்’  என்று எடப்பாடி பழனிசாமியிடம் சி.வி. சண்முகம் பேசியிருக்கிறார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளரான எசாலத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். பன்னீர்செல்வம் அந்த பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், பணமும் செலவு செய்யக் கூடியவர் என்பதாலும் அவரை இடைத்தேர்தலில் களமிறக்க அதிமுக தலைமைக்கு பரிந்துரைத்திருக்கிறார் சி.வி. சண்முகம்.

பாமக கணக்கு என்ன?

இவர்கள் இப்படியென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பற்றி நாளை (ஜூன் 13) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது. மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத்களில் சுமார் 50 பூத்களில் திமுக 3 வது இடத்திற்கு சென்றிருக்கிறது. எனவே பாமக சார்பில் நன்றாக வேலை செய்தால் எப்படியாவது திமுகவை பின்னுக்கு தள்ளி விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.

இடைத்தேர்தல்கள் எப்போதுமே ஆளுங்கட்சியின் சார்பாக நடத்தப்படும் தேர்தல் என்ற கருத்துடையது பாமக. அதனால் இடைத் தேர்தலே நடத்தக் கூடாது என்றும் சொல்லிவந்தார் டாக்டர் ராமதாஸ்.

ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணியிடம், ‘விக்கிரவாண்டியில் பாமக போட்டியிட்டால் சரியாக இருக்கும்.. பாமக போட்டியிடாமல் பாஜக போட்டியிட்டால் இடைத் தேர்தல் களம் திமுக Vs அதிமுக என்றாகிவிடும். பாமக போட்டியிட்டால் திமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான போட்டியாக மாற்றி அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவோம். அதனால் எந்த கவலையும் இல்லாமல் பாமக போட்டியிடட்டும், பாஜக அனைத்து ஆதரவையும் வழங்கும்’ என்று அன்புமணியிடம் பேசியிருக்கிறார் அண்ணாமலை.

அதே நேரம் விழுப்புரம் மாவட்ட பாஜகவினரோ, ‘நாமே போட்டியிடலாம். ஏ.ஜி. சம்பத்தை நிறுத்தலாம். வன்னியர்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது’ என்று தலைமைக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். ஆனாலும் பாமகவை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிறுத்தி அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

இடைத் தேர்தலில் பாமக போட்டியிட்டால் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகத்தின் சகலையான புகழேந்தியை வேட்பாளராகக் களமிறக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவர் திமுகவிற்கு மட்டுமல்லாது அதிமுகவிற்கும் போட்டியைக் கொடுப்பார் என்பது பாமகவின் கணக்காக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனையா? செல்வப்பெருந்தகை விளக்கம்!

அம்மு அபிராமியின் காதலர் இவரா? – அதிர்ச்சியில் குக் வித் கோமாளி ரசிகர்கள்!

 

+1
0
+1
4
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *