வைஃபை ஆன் செய்ததும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரக் காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்காக அமைச்சர்கள் தொகுதிக்குள் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாமக சார்பில் டாக்டர் அன்புமணி, சௌமியா அன்புமணி என குடும்பத்தோடு பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். நாம் தமிழர் வேட்பாளருக்காக சீமானும் விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இடைத் தேர்தலை புறக்கணித்துள்ள அதிமுகவின் வாக்குகள் யாருக்கு என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக வாக்காளர்களை குறிவைத்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் இன்னொரு பக்கம் திமுகவினரும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன் டாக்டர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்துக்குப் பின் எம்.ஜி.ஆர். என்னை அழைத்துப் பேசினார். ஒரு மணி நேரம் அவரிடம் பேசினேன் . பின் வன்னியர்களுக்கு 13% இட ஒதுக்கீடு அளிக்கும் ஃபைலை எம்ஜிஆர் தயாரித்தார். ஆனால் சில வாரங்களில் அவர் காலமாகிவிட்டார். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால் வன்னியர்களுக்கு அன்றே 13% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும் என்று பேசினார். இது அதிமுக வாக்காளர்களை குறிவைத்த பேச்சுதான் என்று விவாதங்கள் நடந்தன.
இதற்கு ஒருபடி மேலே போய் பாமக தலைவர் அன்புமணி தனது பிரச்சார மேடைகளில் ஜெயலலிதா படத்தை இடம்பெறச் செய்திருக்கிறார். அவர் பேசும்போது, ‘அதிமுக, தேமுதிக நண்பர்களே… இம்முறை பாமகவுக்கு வாக்களியுங்கள். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அவர்கள் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்ற மாம்பழத்துக்கு வாக்களியுங்கள்’ என்று பேசினார்.
இன்னொரு பக்கம் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி போன்றோர், ‘எம்.ஜி.ஆர். அடிப்படையில் திமுக காரர். எனவே அதிமுகவினர் திமுகவுக்காகவே வாக்களிப்பார்கள். அதிமுக போட்டியிடாத நிலையில் அவர்களின் வாக்குகள் இன்னொரு திராவிடக் கட்சியான திமுகவுக்குதானே தவிர வேறு யாருக்கும் கிடையாது’ என்று பேசி வருகிறார்கள்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், ‘நான் அதிமுகவுக்கும், பாமகவுக்கும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அதிமுக வாக்குகள் நாம் தமிழருக்கே விழ வேண்டும்’ என்று வேண்டுகோள் வைக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த வாரம் அதிமுக சென்னையில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகிகளை அனுப்பி ஆதரவு அளித்தார்.
இந்த சூழலில் இன்று (ஜூலை 2) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் அன்புமணி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை பயன்படுத்தியது’ பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த எடப்பாடி, ‘இது எங்களுக்கு பெருமை. அதிமுக தலைவர்களை பயன்படுத்தினால்தான் வாக்குகள் விழும் என்ற நிலை இருப்பது எங்களுக்கு பெருமைதானே..?’ என்று பதில் அளித்தார்.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திய பாமக கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அந்த கோபம் பாமக மீது இருந்தாலும்… வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி.
அப்போதுதான் வட மாவட்டத்தில் திமுகவை மேலும் வலுவாக எதிர்க்க முடியும் என்பது எடப்பாடியின் கணக்கு. அந்த அடிப்படையில்தான் மறைந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை பாமக தலைவர் அன்புமணி இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியதை அவர் எதிர்க்கவில்லை. மாறாக இது எங்களுக்கு பெருமை என்கிறார். 2024 இல் கை நழுவிப் போன பாமக கூட்டணி 2026 இல் மீண்டும் அமைய வேண்டும் என்பதற்காகவே விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் விட்டுக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.
இதை வலுப்படுத்துவது போல முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் அதிமுக மாசெவுமான சி.வி. சண்முகம் தைலாபுரம் டாக்டர் ராமதாஸ் குடும்பத்தினரோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அதிமுகவில் இருக்கும் வன்னியர்கள் வாக்குகள் பாமகவுக்குதான் பெருமளவில் செல்லும் என்பதே இப்போதைய நிலை’ என்கிறார்கள்.
இதை எதிர்கொள்ள திமுக ஒரு ட்விஸ்ட் வியூகத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது அதிமுகவின் வன்னியர் வாக்குகளில் கணிசமாக பாமகவுக்குத்தான் போகிறது. அதேநேரம் அதிமுகவின் பாரம்பரிய தலித் வாக்குகளை தேடித் தேடி அறுவடை செய்து வருகிறார்கள் திமுக அமைச்சர்கள். லோக்கல் திமுக நிர்வாகிகளோடு அதிமுகவின் தலித் பிரமுகர்களை சந்தித்து, ‘பாமகவோட பிரச்சாரம் முழுக்க முழுக்க வன்னியர்களை மையமாக வச்சிதான் நடக்குது. அதனால நீங்க இந்தத் தேர்தல்ல திமுகவைதான் ஆதரிக்கணும்’ என்று பேசி அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் அதிமுகவின் தலித் வாக்குகளும், பொதுவாக விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர், தலித் தவிர இருக்கும் பிற சமுதாயத்தினரின் வாக்குகளும் திமுகவுக்கே வரும் என்று கூறுகிறார்கள் அமைச்சர்கள். அதற்கான ஏற்பாடுகளையும் களத்தில் தீவிரமாக செய்து வருகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பயிர் காப்பீடு… விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே முக்கிய கோரிக்கை!
நீட் வினாத்தாள் லீக் : பிரதமர் மோடி சொல்வது என்ன?