டிஜிட்டல் திண்ணை: வந்தார் விஜய்… காத்திருந்த திமுக, ஆனால்? பரந்தூரில் அந்த பத்து நிமிடங்கள்!  

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் பரந்தூரில் விஜய் பேசிய வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்துக்கொண்டே  வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் அரசியல் வாழ்வில் 2024 அக்டோபர் 27 எவ்வளவு முக்கியமான நாளோ, அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த நாளாக எதிர்பார்க்கப்பட்டது 2025 ஜனவரி 20.

விஜய் களத்தில் இறங்கவே இல்லை, அவர் ஒர்க் ப்ரம் ஹோம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த நிலையில்… தனது  கள பிரவேசத்தின் முதல் காட்சியாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திப்பதாக அறிவித்தார் விஜய்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 900 நாட்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதுவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கே சென்று புதிதாக வர இருக்கிற விமான நிலையத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களது ஆதரவையும் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பையும் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஆன செல்வப் பெருந்தகை கூட அங்கே சென்று போராட்ட குழுவினரை சந்தித்துள்ளார்.

ஆனால் அவர்கள் யாருக்கும் கிடைக்காத  ஹைப் விஜய் அங்கே செல்லப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும், விஜய்க்கு கிடைத்தது.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ் பி இடம் தமிழக வெற்றிக்கழக பொருளாளரும் வழக்கறிஞருமான வெங்கட்ரமணன்,  விஜய்யின் வருகை குறித்து தெரிவித்து அதற்கான அனுமதியை கேட்டார். இந்த கடிதத்தையடுத்து நேற்று ஜனவரி 19ஆம் தேதி காஞ்சிபுரம் டிஎஸ்பி,  தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்த கடிதத்தில், அனுமதி கொடுத்ததோடு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தார்.

இந்த நிபந்தனைகளை பின்பற்றாவிட்டால் இந்த அனுமதி ரத்தானதாக கருதப்படும் என்றும் போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ரமணனுக்கு கடிதம் அனுப்பினார்கள்.

இதே நேரம் கடந்த மூன்று நாட்களாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரந்தூருக்கு சென்று  விஜய் வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

இவ்வளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விஜயின் பரந்தூர் விசிட் அவரது தமிழக வெற்றிக் கழகத்தினர், ஆளுங்கட்சியான திமுக, இந்த இரண்டு தரப்பையும் தாண்டிய மற்ற அரசியல் வட்டாரங்கள் என மூன்று தரப்பிலும் சற்று ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் பேசியபோது, ‘எங்கள் தலைவரின் முதல் கள அரசியல் பிரவேசம் என்பதால் நாங்கள் மிகுந்த ஆவலாக இருந்தோம். ஆனால் போலீசார் கொடுத்த அத்தனை நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டு அவர்கள் அளித்த ஒரு மணி நேர நிகழ்ச்சியில் வெறும் ஒன்பது நிமிடங்கள் மட்டும் அந்த மக்களோடு இருந்து பேசிவிட்டு விஜய் திரும்பி விட்டார்.

போலீசார் ஆளுங்கட்சியின் அறிவுரைப்படி இப்படித்தான் நிபந்தனைகளை விதிப்பார்கள். ஒரு எதிர்க்கட்சி அதுவும் வளர துடிக்கிற எதிர்க்கட்சி போலீசாரின் நிபந்தனைகள் எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இதை ஒரு அரசியல் போராட்டக் களமாக ஆக்கியிருக்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினர் மற்றும் அந்த மக்களோடு விஜய் இறங்கி பேசியிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் சாப்பிட்டிருக்க வேண்டும். போலீசார் ஒரு மணி நேரம் அனுமதி கொடுத்திருந்தாலும்,  அதையும் தாண்டி அங்கேயே இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள். இந்த வழக்கு விஜயின் அரசியல் மைலேஜ் அதிகரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் போலீசார் கொடுத்த ப்ளூ பிரிண்ட் படியே விஜய் நடந்து கொண்டிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் பிரச்சார வண்டியில் இருந்தபடியே பேசியிருக்கிறார் விஜய். இதை ஒரு வீடியோ வெளியிட்டு பேசியிருக்கலாமே…?’  என்கிறார்கள்.

ஆளுங்கட்சியான திமுக தரப்பில் பேசியபோது, ‘விஜயிடம் நாங்கள் அதிகமாக எதிர்பார்த்தோம். இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு பதில் சொல்வதற்காக சில புள்ளி விவரங்களுடன் அறிக்கைகளையும் தயாராக வைத்திருந்தோம். ஆனால் தனது முதல் கள அரசியல் பிரவேசத்தில் நுனிப்புல் மேய்ந்து விட்டே சென்றிருக்கிறார் விஜய். போலீஸ் எள் என்றால் விஜய் எண்ணெயாக இருக்கிறார். அவரது அரசியல் அணுகுமுறை எங்களுக்கு புரிந்துவிட்டது’ என்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், ‘என்ன அண்ணே, மூணு நாளா இவ்ளோ பில்டப் பண்ணியும், ஒரு மாசம் ஓட்ட வேண்டிய படத்தை ஒரே நாள்ல முடிச்சிட்டாரு தளபதி?’ என்று சற்று உரிமையோடு கேட்டிருக்கிறார்கள். இதுதான் விஜயின் முதல் கள பிரவேசத்தின் ஃபீட்பேக்” என்ற மெசேஜ்க்கு சென்ட் ஆஃப் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel