டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு விஜய் சொன்ன பதில்… திசை திரும்புகிறதா அதிமுக? காத்திருக்கும் மோடி

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும்  திமுக- அதிமுக இடையிலான அறிக்கை போர் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்த  கையோடு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“2023 செப்டம்பர் மாதமே பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டது அதிமுக. அப்போதே முதல்வர் ஸ்டாலின் முதல் திமுகவின் பேச்சாளர்கள் வரை, ‘அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கள்ளக் கூட்டணி இருக்கிறது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

இப்போது திமுகவினருக்கு இதை வலுவாக சொல்லும் வாய்ப்புகளை மேலும் மேலும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

edappadi return bjp alliance

அண்ணல் அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சைக் கண்டித்து நாடு முழுதும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், அதிமுக மட்டும் இதில் பட்டும் படாமல் கடந்துவிட்டது.

இதையடுத்து திமுகவில் முதல்வரில் தொடங்கி அனைவரும், மீண்டும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணி என்ற வாதத்தை மீண்டும் கையிலெடுத்துவிட்டனர்.

திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பா.ஜ.க.வைக் கண்டித்தாரா? புரட்சியாளர் அம்பேத்கரைக் கொச்சைப்படுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராகக் கீச்சுக்குரலிலாவது கத்தினாரா? இவர்கள் கள்ளக் கூட்டணியாக வந்தாலும் சரி, நேரடிக் கூட்டணி அமைத்து வந்தாலும் சரி,  நாம் தான் வெல்வோம்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

அதேபோல நேற்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய  துணை முதல்வர் உதயநிதி, ‘அதிமுகவுக்கு பாஜகவை பார்த்தால் பயம். அம்பேத்கரை பற்றி விமர்சித்தாலும் எதிர்க்க பயம்,  மாநில உரிமைகளை பறித்தாலும் எதிர்க்க பயம். மாநில சுயாட்சி நாயகன் அண்ணாவின் பெயரை  கட்சிக்கு வைத்துக்  கொண்டு எல்லாவற்றுக்கும் பயப்படுகிறது. அவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் வேறு, நாம் கொண்டாடும் கிறிஸ்துமஸ் வேறு’ என்று குட்டிக் கதையும் சொன்னார் உதயநிதி.

இவ்வாறு ஸ்டாலினும் உதயநிதியும்  போட்டிப் போட்டுக் கொண்டு மாறி மாறி அதிமுகவைத் தாக்குகின்றனர். அவர்கள் மட்டுமல்ல, திமுகவின் அமைச்சர்கள்,  ஊடக முகங்கள் என எல்லாரும்  பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக இருக்கிறது என்று பெரிதாக சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் அதிமுக தரப்பில் வலுவான பதில் இல்லை. அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட எடப்பாடி வெளியிடவில்லை.  எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே தலித்துகளின் வாக்குகள், குறிப்பாக தலித் பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கு பெரும் பங்கு உண்டு.

edappadi return bjp alliance

ஆனால், அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் கருத்துக்கு சின்னச் சின்ன கட்சிகள் கூட போராடிக் கொண்டிருக்கையில், அதிமுக அதை இவ்வளவு எளிதாக கடந்து போனது எவ்வளவு பெரிய தவறு?  இதைச் சொல்லியே தலித் பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கை சீரழித்துவிடும் திமுக’ என அதிமுகவின் தலித் தலைவர்களுக்கு இடையிலேயே சலசலப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து  டிஜிட்டல் திண்ணையிலேயே, ‘அமித் ஷாவை தொடாத எடப்பாடி… அதிமுகவுக்குள் சந்தேகப் புயல்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதற்கிடையில் பொதுச் செயலாளர் எடப்பாடியிடமே சீனியர் தலைவர்கள் சிலர், ‘என்னன்ணே இது…  அம்பேத்கர் விஷயத்துல நாம ஏன் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கணும்?  நாம் என்ன அமித் ஷாவை எதிர்க்காதவர்களா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு எடப்பாடி சொன்ன பதில்தான் முக்கியமானது.

‘நாம விஜய்யோடு தொடர்ந்து பேசிக்கிட்டிருக்கோம். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ எல்லாமே செய்யுறதாவும் சொல்லியிருக்கோம். தேர்தல் செலவை அதிமுகவே ஏத்துக்கும். ஆட்சியில் பங்குன்றதை இப்பவே வெளிப்படையா அறிவிக்க வேணாம். அதை தேர்தல் நெருக்கத்துல பாத்துக்கலாம்னு சொல்லியிருக்கோம். ஆனா விஜய் தரப்புலேர்ந்து எந்த  பதிலும் இல்லை.

எனக்கு கிடைக்கிற தகவல் என்னன்னா…  திமுகவே  விஜய் கட்சியை தனித்து நிக்க வைக்கறதுக்கு பெரிய அளவுல மூவ் பண்றாங்க.  விஜய் அதிமுக கூட்டணி சேர்ந்தா அது திமுகவை பெரிய அளவுல பாதிக்கும்னு ஸ்டாலின் கணக்கு போடுறாரு. அதனால விஜய்யை தனியாக நிக்க வைக்க, புஸ்ஸி ஆனந்த மூலமாக திமுக பல ஏற்பாடுகளை செஞ்சுக்கிட்டிருக்கு.

edappadi return bjp alliance

இப்படிப்பட்ட நிலைமையில அம்பேத்கர் பிரச்சினை ஊடகத்துல அதிகபட்சம் ஒரு வாரம், ரெண்டு வாரம் வரைக்கும் பேசப்படும் விஷயம். மிகப்பெரிய மக்கள் பிரச்சினையில நாம  கண்டுக்காம இருந்தா அது தப்பு. ஆனா,  இது எதிர்க்கட்சிகள் சும்மா கெளப்பிவிடுற விஷயம். இதை வைச்சிக்கிட்டு நாம ஏன் பிஜேபிய எதிர்க்கணும்? இப்பவே நாம் ஏன் எல்லா கதவுகளையும் அடைக்கணும். அதனாலதான்  இப்படி பண்றோம். இந்த சர்ச்சையால அதிமுகவோட தலித் வாக்குவங்கியெல்லாம் பாதிக்காது.

விஜய் நம்முடன் வரலைன்னா, நாம பாஜக – பாமக, தேமுதிக கூட்டணிக்கான ஆப்ஷனையும் ஓப்பனா வச்சிக்கணும்.  ஏற்கனவே நாம மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரணும்னு டெல்லி பிஜேபி தலைவர்கள் விரும்புறாங்க. இந்த நிலையில நாம ஏன் இந்த விஷயத்துக்காக பிஜேபிய எதிர்க்கணும். அதனால காரணமாகத்தான் இந்த அணுகுமுறையை நாம கடைபிடிக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் அபத்த வாதம்!

பாரதியாருக்கு பிறகு கலைஞர்: கட்டணம் இல்லாமல் நாட்டுடைமை!

இரட்டை இலை சின்னம்… தேர்தல் ஆணையத்தில் நடந்தது என்ன? – சி.வி.சண்முகம் பேட்டி!

ஐ.டி.விங்- இளைஞரணி-முதியவர் அணி… அமைச்சர்கள் சுவாரஸ்ய மோதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share