டிஜிட்டல் திண்ணை: 1972 எம்ஜிஆர்… 2024 விஜய்… திமுக மீது அடுத்த மாஸ் அட்டாக்! – விஜய் மாநாட்டுக்கு வந்தது எத்தனை லட்சம் பேர்?

Published On:

| By Selvam

வைஃபை ஆன் செய்ததும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டு வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

விஜய் பேச்சை முழுவதும் பேசி முடித்த பிறகு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“விஜய் கட்சி ஆரம்பிப்பதாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவித்தார். அப்போதே திமுகவில் உதயநிதி தலையெடுத்த பிறகு தான் விஜய் தனது கட்சியை தீவிரப் படுத்துவார் என்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் செய்தி வெளியானது.

அதன்படியே தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் திமுக மீதான மாஸ் அட்டாக்கை தொடங்கி இருக்கிறார் விஜய். அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேல் தான் மாநாடு ஆரம்பிப்பதாக இருந்தாலும், அதிகாலையில் இருந்தே தமிழகம் எங்கிருந்தும் வெற்றிகழகத் தொண்டர்கள் திரள ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து 4,000 போலீசாராக இருந்த எண்ணிக்கையை 6,000 ஆக உயர்த்தினார் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்.

கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்வதை உணர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள், விஜய்யிடம் பேசி மாநாட்டை திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே தொடங்கி ஏழு மணிக்கு முன்பாக முடித்து விடுங்கள்… அப்போதுதான் திரண்டு இருக்கிற லட்சக்கணக்கான கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற முடியும். அதுதான் உங்கள் இமேஜுக்கும் நல்லது’ என்று ஆலோசனை கூறியுள்ளார்கள். அதை ஏற்றுக் கொண்ட விஜய், திட்டமிட்டதற்கு சில மணி நேரம் முன்பாகவே மாநாட்டை ஆரம்பித்தார்.

போலீசாரின் கணக்குப்படி விஜய் மாநாட்டுக்கு 15 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தன. மேலும், சில ஆயிரம் வாகனங்கள் சென்னை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. விக்கிரவாண்டிக்கு முன்னும் பின்னுமாக சாரை சாரையாக வாகனங்கள் நின்றிருந்தன. இந்த அடிப்படையில் மாநாட்டுக்கு திரண்ட மொத்தக் கூட்டம் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் இருக்கும் என்பது தான் போலீசாரின் கணக்கு.

இந்த மாநாட்டில் பேசிய விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கருத்தியல் எதிரி பாஜக என்றும், தேர்தல் கள எதிரி திமுக என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

மேலும், தற்போது நடைபெறுகிற திராவிட மாடல் ஆட்சி மக்கள் விரோத மாடல் என்றும், கரப்ஷன் கபடதாரிகள் தான் தற்போது ஆட்சியில் இருக்கிறார்கள் என்றும் திமுகவை நேரடியாக விமர்சித்தார்.

1972ல் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது, ‘அண்ணா அமர்ந்திருந்த ஆசனத்தில் தற்போது அமர்ந்திருப்பவர்கள் அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தை மக்களுக்காக பயன்படுத்தாமல் தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள். அண்ணாவிடம் இருந்து திமுக வழி தவறிப் போய்விட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற சமய நெறிப்படி அண்ணாயிசம் அதிமுக ஆட்சியில் நிலைநாட்டப்படும்’ என்று அறிவித்தார் எம்ஜிஆர்.

கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியிருக்கும் விஜய் இப்போது எம்ஜிஆர் பாணியிலேயே திமுகவை அட்டாக் செய்திருக்கிறார்.

‘திராவிடமும் தமிழ் தேசியமும் எங்களது இரண்டு கண்கள் போன்றவை. ஆனால், இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி சுயநல அரசியல் நடத்தி ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு குடும்பமே சுரண்டி கொண்டிருக்கிறது. அண்ணா வழியில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்குமான ஆட்சியை தமிழக வெற்றிக்கழகம் அமைக்கும்’ என்று அறிவித்திருக்கிறார் விஜய்.

அப்போது எம்ஜிஆர் காலத்தில் தமிழகத்தில் பாஜக என்ற சக்தி இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தேசிய அளவிலேயே அப்போது ஆர்எஸ்எஸ் தான் இருந்ததே தவிர, பாஜக என்ற அரசியல் கட்சி உருவாகவே இல்லை. எனவே அப்போது எம்ஜிஆருக்கு பாஜக எதிர்ப்பு என்ற கருத்தியல் அறிவிப்பதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது.

ஆனால், இப்போது இந்தியா முழுவதும் பாஜக வலுவாக இருக்கும் நிலையில் விஜய் பாஜக எதிர்ப்பு என்பதை கருத்தியலாகவும் திமுக எதிர்ப்பு என்பதை கள அரசியலாகவும் முன்னெடுத்திருக்கிறார்.

மேலும் தன்னை கூத்தாடிகள் என்று விமர்சிப்பவர்களை சாடியுள்ள விஜய், ‘இதே போலத்தான் தமிழ்நாட்டு வாத்தியார் எம்ஜிஆரையும் ஆந்திர வாத்தியார் என்டிஆரையும் கூத்தாடிகள் என்று விமர்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் உச்சபட்ச பதவியில் அமர்ந்தனர்’ என்றும் பேசியிருக்கிறார்.

அண்ணாவுக்கு எதிராக திமுக செயல்படுகிறது என்று கூறினார் எம்ஜிஆர். பெரியார், அண்ணா ஆகியோர் பெயரைச் சொல்லி திமுக பிழைப்பு நடத்துகிறது என்கிறார் விஜய்.

50 ஆண்டுக்கு முன்பு எம்ஜிஆர் திமுக மீது நடத்திய அட்டாக் போல, விஜய்யின் அட்டாக் இருக்குமா என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் இப்போது விவாதம் ஆகி இருக்கிறது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸப்.

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

மாநாடா படம் ரிவ்யூவா? – அப்டேட் குமாரு

விஜய் ஆஃபர்.. காத்திருக்கும் ரவிக்குமார்… வரவேற்கும் ஆதவ் அர்ஜூனா – விசிகவுக்குள் வித்தியாச கருத்துக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share