வைஃபை ஆன் செய்ததும் விசிக தென் மாநில நிர்வாகிகள் கூட்டம், அறிவாலயத்துக்கு ஸ்டாலின் விசிட் ஆகிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் என்று திமுக தரப்பில் தெரிவித்துவிட்ட நிலையில்… இரண்டு தனி தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என மூன்று தொகுதிகள் வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று கொண்டிருக்கிறார் திருமாவளவன்.
ஆனால் அறிவாலய தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் திருமாவளவனுக்கு அனுப்பிய செய்தியில், ‘இரண்டு தொகுதிகளுக்கு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கையெழுத்து இடுவதற்கு ஆயத்த நிலையில் உள்ளது.
தாங்கள் ஒப்புதலை தெரிவித்தால் உடனடியாக அழைக்கிறோம். அறிவாலயத்துக்கு வந்து கையெழுத்திட்டு உடன்பாடு செய்து கொள்ளலாம்.
மூன்று தொகுதிகள் என்ற உங்களது கோரிக்கையை ஏற்றால், ஏற்கனவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் கொடுத்துள்ளோம்.
அவர்களும் ஆளுக்கு ஒன்று அதிகமாக கேட்பார்கள். மற்ற கூட்டணி கட்சிகளும் கூடுதலாக ஒன்று கேட்பார்கள். இது சாத்தியமில்லாத ஒன்று’ என திருமாவளவனுக்கு தெரிவித்து விட்டார்கள்.
மார்ச் 5 ஆம் தேதி திருமாவளவன் தென் மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அதில் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்று தெரிவித்தவர் தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகள் கேட்டு கொண்டிருக்கிறோம், அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,
திமுக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை… தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம்’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் இன்று பகல் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவாலயத்திற்கு சென்று கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினரிடமும் சிறிது நேரம் ஆலோசனை செய்தார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் பற்றியும் மதிமுக பற்றியும் கேட்டறிந்தார். காங்கிரசுடன் பேசி விரைவில் உடன்பாட்டுக்கு வருவதற்கும் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று இரவு 8.30 வரை விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக விடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை. அதாவது விசிக இரு சீட்டுகளுக்கு ஒப்புக் கொண்டால் அறிவாலயத்தில் இருந்து அழைப்பு செல்லும். இப்போது கூட்டணிப் பந்து திருமாவளவனிடம் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமா கிண்டும் தெலங்கானா குருமா: அப்டேட் குமாரு
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது!