வைஃபை ஆன் செய்ததும் திமுகவின் பவளவிழா கூட்ட லைவ் லிங்க் இன்பாக்ஸில் வந்து விழுந்தது அதை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுகவின் 75 ஆவது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் 28ஆம் தேதி மாலை காஞ்சிபுரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள தொடங்கியது. சில வாரங்களாக திமுக கூட்டணியில் பிரச்சனைகள் வெளிப்படையாக பேசப்பட்டு வந்த நிலையில்… கூட்டணி கட்சி தலைவர்களோடு திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் மேடையில் தோன்றி திமுக கூட்டணியின் சலசலப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதேநேரம் இந்த பவள விழாவில் அனைவரின் கவனிப்புக்கும் உள்ளானவர்கள் அமைச்சர் உதயநிதியும், செந்தில்பாலாஜியும்தான். கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பவளவிழாவில் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் உதயநிதி மேடைக்கு என்ட்ரி ஆனார். அப்போது அவருக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் எழுந்து கைகொடுத்து அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லியுள்ளார்கள்.
மேலும் செந்தில்பாலாஜி பவள விழாவுக்கு வருகை தந்ததும் அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் அவரை வரவேற்று அமர வைத்தனர்.
இந்த பவள விழா கொண்டாட்டத்துக்கு இடையில்தான்… செப்டம்பர் 29ஆம் தேதி உதயநிதி துணை முதலமைச்சராக நியமனம், செந்தில் பாலாஜிக்கும் மற்றும் சிலருக்கும் அமைச்சராக பதவிப் பிரமாணம், மூவர் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு என தகவல்கள் பவளவிழாவிலேயே பரபரப்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது,
‘நெடு வாரங்களாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த உதயநிதிக்கான உயர்வு செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
உதயநிதியை துணை முதல்வராக நியமனம், செந்தில்பாலாஜியை அமைச்சராக நியமனம், மேலும் மூன்று பேர் அமைச்சர்களாக நியமனம் மற்றும் மூன்று அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிப்பு ஆகியவற்றுக்கான பரிந்துரை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், இன்று செப்டம்பர் 28 ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.
இந்த பரிந்துரைக் கடிதம் ஆளுநர் கையில் கிடைப்பதற்குள், அவர் இன்று காலை சீக்கிரமாகவே மதுரைக்கு புறப்பட்டுவிட்டார். மதுரை நிகழ்ச்சியில் இருந்த ஆளுநரிடம் முதல்வரின் பரிந்துரை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது உதயநிதி துணை முதல்வராக நியமனம், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக நியமனம், மேலும் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், இளித்துறை ராமச்சந்திரன் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து விடுவிப்பதற்கான பரிந்துரையைதான் ஆளுநருக்கு முதல்வர் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆளுநர் இந்த பரிந்துரைகளில் செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக நியமிக்கும் பரிந்துரை பற்றி முடிவெடுப்பதற்காக செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய தீர்ப்பு நகலைக் கேட்டுள்ளார். அந்தத் தீர்ப்பு நகலும் இன்று பகலே ஆளுநர் டேபிளில் வைக்கப்பட்டுவிட்டது. எனவே ஆளுநர் இன்று இரவு சென்னை திரும்பியதும் முதல்வரின் பரிந்துரைகள் மீது முடிவெடுத்து விடுவார் என்கிறார்கள். செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இருக்காது என்கிறார்கள் சட்ட வட்டாரங்களில்.
ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் விசாரித்த போது செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடந்தது. அந்த விழாவுக்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் நாற்காலிகள் ஆகியவை இன்னமும் அகற்றப்படவில்லை. இன்னொரு நிகழ்ச்சி இருப்பதால் மேடையை அகற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் வந்திருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் கூறுகிறார்கள். அப்படி என்றால் அதே மேடையில் பேனரை மட்டும் மாற்றி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா 29 ஆம் தேதியே இருக்கும் என்கிறார்கள்.
துணை முதல்வராக நியமிக்கப்படும் உதயநிதிக்கு என்னென்ன துறைகள், மீண்டும் அமைச்சராகும் செந்தில்பாலாஜிக்கு என்னென்ன துறைகள், மாறப் போகும் அமைச்சரவையால் மாறப் போகும் துறைகள் எவை என்பது பற்றிய விவாதங்கள் பவளவிழாவிலேயே திமுகவினர் மத்தியில் நடந்தன. எந்த சீனியரின் துறை பறிக்கப்படும், யார் துறை யாருக்கு மாற்றப்படும் என்பதெல்லாம் திமுகவுக்குள் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
பவள விழா முடிந்ததும் காஞ்சியில் இருந்து திமுகவின் அனைத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் சென்னைக்குத் திரும்புகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? – எடப்பாடி காட்டம்!
துணை முதல்வர் பதவிக்கு டிஎன்பிஎஸ்சி எக்ஸாமா? – ஈஸ்வரன் கேள்வி!