udhayanidhi will meet amit shah
வைஃபை ஆன் செய்ததும் சென்னை வெள்ள நிவாரண காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்த படியே வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை தாக்கிய வெள்ள பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 14 அமைச்சர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில்… தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவும் சென்னை முழுவதும் சுற்றி சுற்றி வந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்டோரும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 7ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய அரசின் சார்பில் சென்னை வந்து ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.
அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி ரூபாய் நிதியை அமித்ஷாவிடமும் பிரதமரிடமும் ஸ்டாலின் கேட்டிருந்த நிலையில்… தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ரூ.450 கோடி ரூபாயும் நகர்ப்புற புனரமைப்பு திட்ட நிதியிலிருந்து ரூ.500 கோடி ரூபாயும் முதல் கட்டமாக அறிவித்துவிட்டு சென்றிருக்கிறார் ராஜ்நாத் சிங்.
இதையடுத்து மத்திய ஜல்சக்தி இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டிசம்பர் 9ஆம் தேதி சென்னை வந்து வெள்ள சேதத்தை பார்வையிடுகிறார்.
தமிழ்நாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்பட்டு அந்த பாதிப்பின் தாக்கம் விலகாத நிலையில், இந்த முறை மத்திய அரசு காட்டும் வேகம் திமுகவினரையே கொஞ்சம் ஆச்சரியத்தில் தான் ஆழ்த்தியிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதாரங்களை மதிப்பிடும் பணிகள் தலைமைச் செயலகத்தில் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலாளர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்து வரும் நிலையில்…. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வெள்ளத்தால் நேரடி பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் மட்டுமன்றி இவற்றுக்கு அருகே உள்ள மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் என சமீபத்தில் பெய்த கனமழை விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சேதாரங்கள் என்ன என்ற மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணி முடிந்த பிறகு விரைவில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்த வெள்ளச் சேதம் எவ்வளவு என்று அறிக்கையோடு அமைச்சர் உதயநிதி தலைமையிலான குழு, டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
இந்த குழுவில் அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி. ஆர். பாலு உள்ளிட்டோர் இடம் பெறலாம் என்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து இந்த அறிக்கையை அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.
2023 பிப்ரவரி 28 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியாக சந்தித்துப் பேசினார். அதற்குப் பின் அவர் சில முறை டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தாலும், உதயநிதியின் இந்த டெல்லி பயணம் வெள்ள விவகாரம் மட்டுமல்ல, அரசியல் விவகாரம் தொடர்பான முக்கியத்துவமும் பெறுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெள்ள பாதிப்பு : சென்னை வரும் மத்திய இணையமைச்சர்!
மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!
udhayanidhi will meet amit shah