வைஃபை ஆன் செய்ததும் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்ட வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுகவின் முக்கியமான முதன்மையான அணியான இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் இன்று (ஜூலை 29) அறிவாலயத்தில் புதிய இளைஞர் அணி மாவட்ட, மாநகர, அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பேசிய பேச்சு உதயநிதியின் அடுத்த பிரமோஷனுக்கான அடித்தளமாக அமைந்தது.
நிகழ்வில் பேசிய திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, ‘மறைந்த தலைவர் கலைஞர் அன்று ஸ்டாலினுக்கு உரிய முக்கியத்துவத்தை உரிய நேரத்தில் அளிப்பதற்கு தயங்கினார். இளைஞர் அணி அமைக்கப்பட்ட போது கூட அதன் 5 செயலாளர்களில் ஒருவராகத்தான் ஸ்டாலினை நியமித்தார். 89-இல் ஸ்டாலின் வெற்றி பெற்ற போதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்தார். 96-இல் தான் அவருக்கு மேயர் பதவியை வழங்கினார்’ என்றெல்லாம் குறிப்பிட்டு… இன்றைக்கு உதயநிதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கே பதில் அளிக்கும் வகையில் ஆற்றலோடு செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்.
உதயநிதி உயரமாகிக் கொண்டே வருகிறார். அவர் எப்போது முதலமைச்சராவார் எப்போது தமிழினத் தலைவர் ஆவார் என்பதை இந்த நாடு முடிவெடுக்கும். அதுவரை உதயநிதியின் கரத்தை வலுப்படுத்துவோம்’ என்று பேசினார்.
அதேபோல துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா பேசும்போது, ‘பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று இந்த விழாவிற்கு வரவில்லை. வந்திருந்தால் எனக்கும் அவருக்கும் போட்டி நடந்திருக்கும். நமது தலைவர் ஸ்டாலின் செயல் தலைவர் ஆன போதும் சரி முதலமைச்சரான போதும் சரி, ‘நான் தூக்கி வளர்த்த பிள்ளை’ என்று உரிமை கொண்டாடுவார் துரைமுருகன். இன்னும் இருபது வருடங்களில் இதே போல உதயநிதிக்கு நான் உரிமை கொண்டாடுவேன். ஏனெனில் இப்போது இளைஞர் அணியை கவனிக்கும் பொறுப்பில் நான் இருக்கிறேன்’ என பேசினார்.
இவர்களை எல்லாம் தாண்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் கட்சியிலும் சிறப்பாக செயல்படுகிறார். ஆட்சியிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் எடுத்துக்காட்டிய ஒற்றை செங்கல்லை இன்று வரை எதிரிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன்’ என்றெல்லாம் புகழ்ந்தார்.
கடந்த ஜூலை 17, 18, 19 தேதிகளில் உதயநிதி திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி விழாவில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, ‘திமுகவின் எதிர்காலத் தலைவர் உதயநிதி ஸ்டாலின்’ என்று பிரகடனப்படுத்தினார். அது மட்டுமல்ல அந்த மூன்று நாள் பயண அனுபவத்தை பற்றி அண்ணாமலைக்கு வந்த அதிவீரன் என்ற தலைப்பில் முரசொலியில் முழு பக்க கட்டுரையும் எழுதினார். அந்தக் கட்டுரையை இன்று தனது உரையில் குறிப்பிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் வேலு சுட்டிக்காட்டிய திசையில் இன்று திமுகவின் பொருளாளர் பாலு, துணைப் பொதுச் செயலாளர் ராசா உள்ளிட்டோர் பேசியிருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தின் இன்னொரு முக்கிய அம்சமாக மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் சேலத்தில் வரும் டிசம்பர் மாதம் இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு நடைபெற இருக்கிறது என்ற அறிவிப்பையும் வெளியிட்டார் உதயநிதி.
2007-ல் திருநெல்வேலியில் இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதற்குப் பிறகான ஓரிரு வருடங்களில் அதாவது 2009 இல் துணை முதல்வராக பதவி ஏற்றார் ஸ்டாலின்.
அதே வகையில் 2023 திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டுக்குப் பிறகு ஓரிரு மாதங்களிலேயே அதாவது வருகிற எம்பி தேர்தலுக்கு முன்னதாகவே உதயநிதி துணை முதல்வராக பதவியேற்பார். இன்னும் அவருக்கு கூடுதல் துறைகள் வழங்கப்படும் என்கிறார்கள் இன்று அறிவாலயத்தில் நடந்த அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக சீனியர்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.